மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்


மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
x
தினத்தந்தி 12 Aug 2021 9:34 PM IST (Updated: 12 Aug 2021 9:34 PM IST)
t-max-icont-min-icon

கீழையூர் அருகே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.

வேளாங்கண்ணி:
கீழையூர் அருகே மாணவர்களின் வீடுகளுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் நடத்தி வருகின்றனர்.
ஊரடங்கு
சீனாவில் இருந்து வந்த கொரோனா உலக முழுவதும் பரவி வருகிறது. இதன் கோரப்பிடியில் சிக்கி லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில்  கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சி மூலம் வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் 1½ ஆண்டுகளுக்கு மேல்  மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் நாகை மாவட்டம் கீழையூர் அருகே திருமணங்குடியில் உள்ள அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியின் செயலாளர் திருஞானசம்பந்தம் ஆலோசனைப்படியும், வட்டார கல்வி அலுவலர் சுப்பிரமணியன் அறிவுரையின்படியும், திருமணங்குடி பகுதியில் தொலைக்காட்சி பெட்டி மற்றும் செல்போன் வசதி இல்லாத மாணவர்களின் வீடுகளுக்கு ஆசிரியர்கள் சென்று பாடம் நடத்தி வருகின்றனர். ஒரு நாளைக்கு ஒரு ஆசிரியர் வீதம் மாணவர்களின் வீடுகளுக்கு சென்று பாடம் நடத்தி வருகின்றனர்.
மாணவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று பாடம் நடத்துவதை மாணவர்களின் பெற்றோர் பாராட்டினர்.

Next Story