போடிமெட்டு சோதனை சாவடியில் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் கேரளா செல்ல அனுமதி மறுப்பு


போடிமெட்டு சோதனை சாவடியில்  விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் கேரளா செல்ல அனுமதி மறுப்பு
x
தினத்தந்தி 12 Aug 2021 9:49 PM IST (Updated: 12 Aug 2021 9:49 PM IST)
t-max-icont-min-icon

போடிமெட்டு சோதனை சாவடியில் விவசாயிகள், தோட்ட தொழிலாளர்கள் கேரளா செல்ல அனுமதி மறுக்கப்பட்து. இதனால் அவர்கள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

போடி:
கேரள பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தமிழக எல்லை பகுதிகளான கம்பம் மெட்டு, குமுளி ஆகிய சோதனைச்சாவடிகளில் கேரள போலீசார் மற்றும் சுகாதார துறையினர் இரண்டு தடுப்பூசி போட்ட சான்றிதழ் அல்லது 72 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ், இ-பாஸ் ஆகியவை இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் செல்ல அனுமதித்தனர். இதனால் பலர் வாகனங்களில் போடி மெட்டு வழியாக கேரளாவுக்கு சென்றனர்.
இந்நிலையில் நேற்று காலை முந்தல் மற்றும் போடி மெட்டு சோதனைச்சாவடியில் தமிழக போலீசார், கேரளாவிற்கு செல்லும் ஏலக்காய் விவசாயிகள் மற்றும் தோட்டத்தொழிலாளர்களிடம் சோதனை நடத்தினர். அப்போது இ-பாஸ் மற்றும் 2 தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ், 72 மணி நேரத்துக்கு முன் எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்பதற்கான சான்றிதழ் இவை இரண்டில் ஏதாவது ஒன்று இருந்தால் மட்டுமே கேரளாவுக்குள் செல்ல அனுமதி அளித்தனர். அவ்வாறு இல்லாதவர்கள் கேரளா செல்ல அனுமதி மறுக்கப்பட்டு அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதனால் ஏலக்காய் விவசாயிகள், தோட்டத்தொழிலாளர்கள் போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும், பரபரப்பும் ஏற்பட்டது. எனினும் உரிய ஆவணங்கள் இருந்த வாகனங்கள் மட்டுமே கேரளாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.


Next Story