கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை


கேரளாவிலிருந்து வருபவர்களுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை
x
தினத்தந்தி 12 Aug 2021 10:00 PM IST (Updated: 12 Aug 2021 10:00 PM IST)
t-max-icont-min-icon

கேரளாவிலிருந்து சித்தூர் வழியாக தமிழகம் வருபவர்களுக்கு மாநில எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

காட்பாடி

தீவிர கண்காணிப்பு

வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு மற்றும் ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடிகளில் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

வெளி மாநிலங்களில் இருந்து அனுமதி பெற்று வரும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி இடையே வழக்கம் போல பஸ் போக்குவரத்து தொடங்கப்படவில்லை. இ-பாஸ் இல்லாமல் ஆந்திர மாநில வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

வெப்ப நிலை 

ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு சுகாதாரத்துறையினர் தெர்மல் ஸ்கேனர் கருவி மூலம் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்கின்றனர். எங்கிருந்து வருகிறார்கள் என முகவரி பதிவு செய்யப்படுகிறது. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆந்திராவில் இருந்து வருபவர்களுக்கு ஏதாவது அறிகுறி இருந்தால் மட்டுமே கொரோனா பரிசோதனைக்காக செய்யப்படுகிறது. 

கட்டாய பரிசோதனை

கேரளாவில் தற்போது கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே கேரள மாநிலத்திலிருந்து வரும் அனைவருக்கும் கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அவர்களுக்கு அறிகுறி இல்லாவிட்டாலும் சோதனைக்கு உட்படுத்தப் படுகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைகளிலும் கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன.

Next Story