தர்மபுரி நகராட்சியில் ரூ.9 கோடி வரி, குடிநீர் கட்டண பாக்கியை வசூலிக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு, கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்


தர்மபுரி நகராட்சியில் ரூ.9 கோடி வரி, குடிநீர் கட்டண பாக்கியை வசூலிக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு, கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 12 Aug 2021 10:04 PM IST (Updated: 12 Aug 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்து வரி, வாடகை மற்றும் குடிநீர் கட்டண பாக்கி ரூ.9 கோடி நிலுவைத்தொகையை உடனே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தி உள்ளார்.

தர்மபுரி:
தர்மபுரி நகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்து வரி, வாடகை மற்றும் குடிநீர் கட்டண பாக்கி ரூ.9 கோடி நிலுவைத்தொகையை உடனே வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நகராட்சி அலுவலர்களுக்கு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தி உள்ளார்.
கலெக்டர் ஆய்வு
தர்மபுரி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் திவ்யதர்சினி திடீரென ஆய்வு மேற்கொண்டார். நகராட்சி பகுதியில் நிறைவேற்றப்பட்டு வரும் பாதாள சாக்கடை திட்டம், குப்பைகளை தரம் பிரிக்கும் திட்டம் ஆகியவை குறித்து நகராட்சி அதிகாரிகளுடன் கலெக்டர் கேட்டிருந்தார். 
நகராட்சிக்கு வர வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வாடகை போன்ற வருவாய் இனங்களின் நிலுவைத்தொகை எவ்வளவு உள்ளது என்று அவர் கேட்டறிந்தார்.
அப்போது கலெக்டர் கூறும் போது,‘தர்மபுரி நகராட்சியில் நிலுவையில் உள்ள சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வாடகை பாக்கி ரூ.9 கோடியை உடனடியாக வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பஞ்சப்பள்ளி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பாலக்கோடு மற்றும் மாரண்டஅள்ளி பேரூராட்சிகளில் இருந்து தர்மபுரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவைத்தொகை சுமார் ரூ.1 கோடியே 75 லட்சத்தை உடனடியாக வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தர்மபுரி நகராட்சியில் சேகரமாகும் குப்பைகளை உடனடியாக தரம்பிரித்து உரம் தயாரிக்கும் பணியை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.
குப்பை கிடங்கு
இதைத்தொடர்ந்து தடங்கம் கிராமத்தில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கலெக்டர் திவ்யதர்சினி திடீர் ஆய்வு மேற்கொண்டார். இங்கே ஏற்கனவே தேங்கியுள்ள குப்பைகளை தரம் பிரித்து அதனை அரைக்கும் பணியை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் என்று கலெக்டர் கூறினார். பின்னர் அன்னசாகரம் ஏரியை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது தர்மபுரி நகராட்சி ஆணையாளர் சித்ரா, தர்மபுரி தாசில்தார் ராஜராஜன், நகராட்சி உதவி பொறியாளர் ரவிக்குமார், நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோவன், ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், நாகராஜன், சுசீந்திரன், ரமண சரண், நகராட்சி வருவாய் ஆய்வாளர் மாதையன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story