நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கவேண்டும்


நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கவேண்டும்
x
தினத்தந்தி 12 Aug 2021 10:07 PM IST (Updated: 12 Aug 2021 10:07 PM IST)
t-max-icont-min-icon

பட்டிவீரன்பட்டி அருகே நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல்: 

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே மருதாநதி அணை உள்ளது. இந்த அணையின் மூலமாக 6 ஆயிரத்து 583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பாசனத்தின் மூலம் அய்யன்கோட்டை, புதூர், நெல்லூர், ரங்கராஜபுரம் காலனி ஆகிய பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் 2-ம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 

தற்போது அந்த பகுதியில் நெல் அமோக விளைச்சல் அடைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகளிடம் கேட்டபோது, இப்பகுதியில் விளையும் நெல்லை பட்டிவீரன்பட்டி அருகே உள்ள சித்தரேவு அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பி வந்தோம். தற்போது இந்த அரசு நேரடி  கொள்முதல் நிலையம் மூடப்பட்டுள்ளது. 

இதனால் ஆத்தூர் நெல் கொள்முதல் நிலையத்துக்கு நெல்லை கொண்டு செல்ல வேண்டியுள்ளது. எங்களுக்கு வீண் அலைச்சல் மற்றும் அதிக செலவு ஏற்படுகிறது. எனவே சித்தரேவில் அரசு நேரடி கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும் என்றனர். 

Next Story