ஒப்பந்த தூய்மை பணியாளர் முறையை மாற்ற வேண்டும். ஆணைய தலைவர் வெங்கடேசன் பேட்டி.
உள்ளாட்சி அமைப்புகளில் ஒப்பந்த தூய்மை பணியாளர் முறையை மாற்றவேண்டும் என்று தேசிய ஆணையத்தலைவர் வெங்கடேசன் அறிவுறுத்தி உள்ளார்.
ராணிப்பேட்டை
ஆய்வுகூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். தேசிய தூய்மை பணியாளர்கள் நல ஆணையத்தின் தலைவர் எம்.வெங்கடேசன் தலைமை தாங்கி ஆய்வு செய்தார்.
அப்போது ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களின் சம்பளம், வருங்கால வைப்பு நிதி, இ.எஸ்.ஐ., காப்பீடு, மருத்துவ பரிசோதனைகள் குறித்து தூய்மைப் பணியாளர்களிடம் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையாளர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் இளவரசி, மண்டல நகராட்சி நிர்வாக இயக்குனர் குபேந்திரன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் இளங்கோவன், தெற்கு மண்டல ெரயில்வே பயணியர் ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.வேல்முருகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் தூய்மைப் பணியாளர் நல ஆணையத் தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாற்ற வேண்டும்
ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் முறையினை மாற்றி நிரந்தர தூய்மைப் பணியாளர் நடைமுறையினை அரசுகள் செயல்படுத்த வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சம்பளம், வைப்புத் தொகை, காப்பீடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது. நிரந்தர பணியாளர்களுக்கு வழங்கப்படும் சம்பளம் போன்று ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம்.
தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினைகள் குறித்து ஓய்வுபெற்ற நீதிபதிகள் கொண்ட குழு அமைத்து குறைகளை கேட்டறிந்து தீர்வு காண அரசு வழிவகை செய்ய வேண்டும்.
ரூ.93 லட்சம் கடன் உதவி
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 34 பயனாளிகளுக்கு ரூ.93 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. கடன் உதவி வேண்டும் தூய்மைப் பணியாளர்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பிரச்சினைகள் குறித்து தொலைபேசி, இணையம் மற்றும் உரையாடல் குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கலாம். இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆணையம் அரசுக்கு பரிந்துரை செய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக ராணிப்பேட்டை காரை பகுதியிலுள்ள தூய்மைப் பணியாளர்களின் குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பெல்நிறுவன தொழிலாளர்களிடத்திலும் குறைகளைகேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் ராணிப்பேட்டை பெல் நிறுவன பொது மேலாளர் (பொறுப்பு) ராஜீவ் சிங் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story