குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்


குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும்
x
தினத்தந்தி 12 Aug 2021 10:37 PM IST (Updated: 12 Aug 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

அய்யன்கொல்லி அருகே குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பந்தலூர்,

பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே புஞ்சைக்கொல்லி உள்ளது. இங்குள்ள சந்திப்பில் இருந்து பள்ளிவாசல் வழியாக கொளப்பள்ளி அரசு தேயிலை தோட்ட பகுதிக்கு தார்சாலை செல்கிறது. இந்த தோட்ட பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இவர்கள் அவசர மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக அந்த சாலை வழியாக அய்யன்கொல்லிக்கு சென்று வர வேண்டிய நிலை இருக்கிறது.

இந்த நிலையில் புஞ்சைக்கொல்லியில் இருந்து கொளப்பள்ளி செல்லும் அந்த சாலை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. தற்போது அது தார்சாலை போலவே இல்லாமல் சோலிங்கற்கள் பதிக்கப்பட்ட சாலை போல காட்சியளிக்கிறது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.  

இதுகுறித்து அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- பலத்த மழை உள்பட பல்வேறு காரணங்களால் எங்கள் பகுதியில் உள்ள சாலை பழுதடைந்து விட்டது. குண்டும், குழியுமாக கிடப்பதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் நடுவழியில் பழுதடைந்து விடுகின்றன. மேலும் அவசர தேவைக்காக ஆஸ்பத்திரிக்கு கூட விரைவாக செல்ல முடியாத நிலை உள்ளது. 

சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சாலை மேலும் மோசமாகி வருகிறது. வாடகை வாகனங்களை இயக்க டிரைவர்கள் முன்வராததால், புஞ்சைக்கொல்லியில் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொண்டு நடந்து வரும் நிலை காணப்படுகிறது. 

இது மட்டுமின்றி சாலை சீரமைக்கப்படாததால், அங்கு மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே தடுப்புச்சுவர் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மழைநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மீண்டும் சாலை சேதமடைவது தடுக்கப்படும்.

மழைக்காலங்களில் அந்த சாலையில் செல்ல முடிவது இல்லை. சாலையில் கிடக்கும் பள்ளங்களில் வழுக்கி விழும் நிலை உள்ளது. காட்டுயானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் துரத்தினால் கூட விரைவாக ஓடி சென்று தப்ப முடியாது. எனவே சாலையை உடனடியாக சீரமைத்து, எங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story