வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்வு
நீர் வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்கிறது. இதனால் 6 மாதங்களுக்கு பிறகு சென்னைக்கு தண்ணீர் அனுப்பப்படுகிறது.
காட்டுமன்னார்கோவில்,
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. 47.50 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரி கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த ஏரிக்கு சாதாரண காலங்களில் வடவாறு வழியாகவும், மழைக்காலங்களில் வீராணம் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்கிற மழைநீர் செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாகவும் தண்ணீர் வரும்.
இதுதவிர வீராணம் ஏரியின் நீர் மட்டத்திற்கு ஏற்ப சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக தினந்தோறும் தண்ணீர் அனுப்பப்படும்.
இந்த நிலையில் வீராணம் ஏரியில் மராமத்து பணி நடைபெற்றதாலும், சென்னைக்கு குடிநீர் தொடர்ந்து அனுப்பப்பட்டதாலும் வீராணம் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக குறையத்தொடங்கியது. இதனால் கடந்த பிப்ரவரி மாதம் முதல், சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு வடலூர் வாலஜா ஏரியில் இருந்து அனுப்பப்பட்டு வந்தது.
மேலும் நீர்வரத்து இல்லாததால் வீராணம் ஏரியில் தண்ணீர் இல்லாத நிலை காணப்பட்டது.
நீர்மட்டம் உயர்ந்தது
இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வழியாக கீழணையை வந்தடைந்தது. தொடர்ந்து அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் உயர தொடங்கியது.
சென்னைக்கு குடிநீர்
மேலும் கல்லணையில் இருந்து கீழணைக்கு கடந்த 2 நாட்களாக வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் நேற்று முன்தினம் கீழணையின் நீர்மட்டம் 8.50 அடியாக உயர்ந்தது. இதனால் வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1200 கனஅடி தண்ணீர் வடவாறு வழியாக அனுப்பி வைக்கப்பட்டது. வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், நேற்றைய நிலவரப்படி ஏரியின் நீர்மட்டம் 41.10 அடியை தொட்டது.
இதனால் கடந்த 6 மாதங்களுக்கு பிறகு சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியில் இருந்து நேற்று காலை முதல் வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் அனுப்பப்பட்டுவருகிறது. மேலும் வீராணம் ஏரிக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து காணப்படுவதால், ஏரியில் மராமத்து பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story