திண்டிவனம் அருகே 54 ஆமைகளை கடத்திய 4 பேர் கைது வனத்துறையினர் நடவடிக்கை


திண்டிவனம் அருகே 54 ஆமைகளை கடத்திய 4 பேர் கைது வனத்துறையினர் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Aug 2021 10:51 PM IST (Updated: 12 Aug 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனம் அருகே 54 ஆமைகளை கடத்தி வந்த 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

திண்டிவனம், 

வாகன சோதனை

திண்டிவனம் வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனவர் திருமலை, வனக்காப்பாளர்கள் கஜேந்திரன், முருகன், மனோஜ்குமார் ஆகியோர் கொண்ட வனத்துறையினர் நேற்று விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த உசுட்டேரி பறவைகள் சரணாலயத்தின் நுழைவாயில் முன்புள்ள பூத்துறை- பெரம்பை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சாக்கு பையுடன் ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை சந்தேகத்தின்பேரில் தடுத்து நிறுத்தி, சாக்கு பையை சோதனையிட்டதில், 54 ஆமைகள் இருந்தது கண்டு          பிடிக்கப்பட்டது. 

ஆமைகள் பறிமுதல்

இதையடுத்து பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் வானூர் அடுத்த குதிரைப்பண்ணை இடையஞ்சாவடியை சேர்ந்த ஏழுமலை மகன் கன்னியப்பன் (வயது 24), அழகப்பன் மகன் அய்யனார் (25), சுதாகர் மகன் சக்திவேல் (19), அழகப்பன் மகன் வினோத் (19) ஆகியோர் என்பதும், உசுட்டேரி பகுதியில் இருந்து ஆமைகளை பிடித்து சமைத்து சாப்பிடுவதற்காக சொந்த ஊருக்கு கடத்திச் சென்றபோது சிக்கியதும் தெரியவந்தது. 
அதைத்தொடர்ந்து ஆமைகளை கடத்திய 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 54 ஆமைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story