காட்டு யானை தாக்கியதில் கல்லூரி மாணவி சாவு


காட்டு யானை தாக்கியதில் கல்லூரி மாணவி சாவு
x
தினத்தந்தி 12 Aug 2021 11:07 PM IST (Updated: 12 Aug 2021 11:07 PM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

அழகியபாண்டியபுரம்:
குமரி மாவட்டத்தில் காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இந்த சோக சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- 
கல்லூரி மாணவி
குமரி மாவட்டம் கீரிப்பாறை வாைழயத்துவயல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 52). இவர் கீரிப்பாறை அருகே மாறாமலை எஸ்டேட் பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் ஸ்ரீணா (20). 
இவர் கோவையில் உள்ள வேளாண்மை கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் அவர் சொந்த ஊரில் தங்கியிருந்தார். கடந்த மாதம் 20-ந் தேதி மணிகண்டன் வழக்கம் போல் மோட்டார் சைக்கிளில் மாறாமலை டீக்கடைக்கு புறப்பட்டார். அந்த டீக்கடையின் அருகே உள்ள ஒரு கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் கலந்து கொள்வதற்காக மணிகண்டனுடன் மகள் ஸ்ரீணாவும் உடன் சென்றார். 
யானை தாக்கியது
தந்தை, மகள் இருவரும் சென்று கொண்டிருந்த போது, வழியில் சாலையோரம் புதரில் குட்டியுடன் 2 யானைகள் நின்று கொண்டிருந்தன. இதனை கவனிக்காமல் மணிகண்டன் மோட்டார் சைக்கிளை ஓட்டியுள்ளார். அந்த சமயத்தில் ஒரு யானை திடீரென மோட்டார் சைக்கிளை காலால் எட்டி தள்ளியது.
இதில் தந்தையும் மகளும் கீழே விழுந்தனர். உடனே ஒரு யானை ஸ்ரீணாவை காலால் மிதித்தது. இதற்கிடையே சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் ஓடி வந்தனர். பொதுமக்களை கண்டதும் யானைகள் அங்கிருந்து சென்று விட்டன. 
பரிதாப சாவு
யானை தாக்கியதில் ஸ்ரீணாவுக்கு படுகாயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்ததில் மணிகண்டனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது. 
இதனை தொடர்ந்து படுகாயம் அடைந்த தந்தை, மகளை பொதுமக்கள் மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மணிகண்டன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். ஆனால் ஸ்ரீணாவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் திடீரென உடல் நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக அவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கீரிப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யானை தாக்கியதில் கல்லூரி மாணவி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story