விஷம் குடித்து மயங்கி கிடந்த ஜோடி


விஷம் குடித்து மயங்கி கிடந்த ஜோடி
x
தினத்தந்தி 12 Aug 2021 11:32 PM IST (Updated: 12 Aug 2021 11:32 PM IST)
t-max-icont-min-icon

பழனி இடும்பன்மலையில் விஷம் குடித்து ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்தனர். இவர்கள் கள்ளக்காதல் ஜோடியா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பழனி:

மயங்கி கிடந்த ஜோடி

பழனி இடும்பன்மலையில் இடும்பன் கோவில் உள்ளது. இது, பழனி முருகன் கோவிலின் உபகோவில் ஆகும். பழனி கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள், இந்த கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். 

நேற்று மாலை இடும்பன்மலைக்கு செல்லும் படிப்பாதை அருகே உள்ள பாறையில் ஆணும், பெண்ணும் மயங்கி கிடந்தனர். இதனைக்கண்ட பக்தர்கள், அதிர்ச்சி அடைந்து பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

 மருத்துவமனையில் அனுமதி

அப்போது மயங்கி கிடந்த 2 பேரின் வாயில் இருந்து நுரை தள்ளியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். அவர்களின் அருகே செல்போன்கள், ஆதார் கார்டு, மது மற்றும் விஷ பாட்டில்கள் கிடந்தன. 

இதனையடுத்து மயங்கி கிடந்த 2 பேரையும் போலீசார் மீட்டு, சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக, மதுரை அரசு மருத்துவமனையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே சம்பவ இடத்தில் கைப்பற்றப்பட்ட ஆதார் கார்டு அடிப்படையில் போலீசார் விசாரித்தனர். 

 கள்ளக்காதலர்களா? 

விசாரணையில் அவர்கள், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை தாலுகா கல்லாரம் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் (வயது 45), பளியக்குடி பகுதியை சேர்ந்த இன்பராஜ் மனைவி குமாரி (43) என்று தெரியவந்தது.

பழனி வந்த இவர்கள் 2 பேரும், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இவர்கள் எதற்காக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்கள்? என்பது குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் இவர்கள் கள்ளக்காதல் ஜோடியாக இருக்கலாம் என்று கருதி போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பழனி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story