வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வெல்லம் உற்பத்தி கூடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 22 வெல்லம் உற்பத்தி கூடங்களில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்தனர்.
வேலூர்
வெல்லத்தில் கலப்படம்
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனையாகும் வெல்லத்தில் அதிகளவு கலப்படம் செய்யப்படுவதாக தமிழக அரசுக்கு புகார்கள் சென்றன. அதன்பேரில் உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர் செந்தில்குமார் வெல்லத்தில் கலப்படம் செய்வதை தடுக்க மாநில அளவில் குழு ஒன்று அமைத்தார். மேலும் 11 மாவட்டங்களில் உள்ள வெல்லம் உற்பத்தி கூடங்களில் ஆய்வு நடத்தும்படியும், கலப்படம் செய்யும் உற்பத்தி கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் வி.செந்தில்குமார் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ், சிவமணி, கந்தவேல், பழனிசாமி மற்றும் பலர் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள வெல்லம் உற்பத்தி கூடங்களில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
மாதிரி சேகரிப்பு
அப்போது அங்கு தயாரிக்கப்படும் வெல்லம் தரமாக உள்ளதா, அவற்றில் சுண்ணாம்பு அல்லது சர்க்கரை மற்றும் நிறமிகள் சேர்க்கப்படுகிறதா என்று சோதனை செய்தனர். மேலும் சில இடங்களில் தயாரிக்கப்பட்ட வெல்லத்தை பரிசோதனைக்கு அனுப்புவதற்காக அவற்றின் மாதிரி எடுத்து கொண்டனர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள 22 வெல்லம் உற்பத்தி கூடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 5 இடங்களில் வெல்லம் பரிசோதனைக்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. அவை மதுரையில் உள்ள உணவு பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பரிசோதனையில் வெல்லத்தில் கலப்படம் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தால் அந்த கூடத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
Related Tags :
Next Story