மணல் திருட்டை தடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு
காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டை தடுக்கக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
கரூர்
மணல் அள்ள தடை
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் சார்பில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கரூர் மாவட்டத்தில் காவிரி ஆற்றில் 2017-ம் ஆண்டு முதல் மணல் அள்ள தடைவிதித்துள்ளது. அதேபோல் அமராவதி ஆற்றில் 2015-ம் ஆண்டு முதல் மணல் அள்ள தடை உள்ளது.
மணல் குவாரி
கரூர் அமராவதி ஆற்றில் 2019-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகம் 5 இடங்களில் மணல் அள்ள குவாரி அமைத்தது. இதை எதிர்த்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மணல் குவாரி அமைக்க தடையாணை பிறப்பித்துள்ளது. மேலும் 13 மாவட்டங்களில் சவுட்டு மண், கிராவல் மண், வண்டல் மண், தவிட்டு மண் எடுப்பதற்கு தடை விதித்துள்ளது.
இந்தநிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள குளங்கள், ஏரிகள், அரசு புறம்போக்கு நிலங்கள், கோவில் நிலங்கள் ஆகியவற்றில் தவிட்டு மண், வண்டல் மண், கிராவல் மண் திருடப்பட்டு வருகிறது. மேலும் ஆங்காங்கே காவிரி ஆற்றுப்பகுதியிலும், அமராவதி ஆற்றுப்பகுதியிலும் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது.
இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்
காவிரி ஆறு செல்லும் மண்மங்கலம் தாலுகா வாங்கல் பகுதியிலும், நெரூர் தென்பாகம் சதாசிவ பிரம்மேந்திரர் கோவில், புதுப்பாளையம் பகுதிகளிலும் காவிரி ஆற்றுப்பகுதியில் மணல் திருட்டும், தவிட்டு மண் திருட்டும் நடந்து வருகிறது. தினமும் 5 பொக்லைன் எந்திரங்களின் உதவியுடன் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணலும், தவிட்டு மண்ணும் திருடப்பட்டு வருகிறது.
கரூர் தாலுகா, மேலப்பாளையம் கிராமத்தில் அமராவதி ஆற்றுப்பகுதிகளிலும், புலியூர் கட்டளை வாய்க்கால் பகுதிகளிலும் தினமும் 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் மணலும், தவிட்டு மண்ணும் திருடப்பட்டு வருகிறது.
எனவே மணல், தவிட்டு மண், வண்டல் மண், கிராவல் மண் கொள்ளையை தடுத்து, இயற்கை வளங்களையும், ஆறுகளையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story