பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் பழமையான நகரம் இருந்ததற்கான சான்றாக செங்கல் கால்வாய் கண்டுபிடிப்பு


பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சியில் பழமையான நகரம் இருந்ததற்கான சான்றாக செங்கல் கால்வாய் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 13 Aug 2021 12:03 AM IST (Updated: 13 Aug 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

பொற்பனைக்கோட்டை அகழ்வாராய்ச்சி பணியின்போது, பழமையான நகரம் இருந்ததற்கான சான்றாக செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருவரங்குளம்
அகழ்வாராய்ச்சி பணி 
புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அருகே வேப்பங்குடி ஊராட்சியில் பொற்பனைக்கோட்டை கிராமம் உள்ளது. இங்கு கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 
இந்த கிராமத்தில் 2-ம் நூற்றாண்டை சேர்ந்த மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள், மன்னர்கள் கோட்டை கட்டி ஆட்சி புரிந்ததற்கான பல்வேறு அடையாளங்கள், குறியீடுகள் ஒவ்வொரு நாளும் கிடைக்க பெற்று வருகின்றது.
இதுவரை முன்னோர்கள் பயன்படுத்திய மண் பாண்டங்கள், சிறிய ஆயுதங்கள், கருப்பு, சிவப்பு என அழகிய வேலைபாட்டுடன் கூடிய மண் பாத்திரங்கள், குடுவைகள், கிண்ணம், பெண்கள் விளையாடிய வட்டக்கல் துண்டு, வளையல்கள் உள்ளிட்ட சங்ககாலத்தில் முன்னோர்கள் பயன்படுத்திய பல்வேறு  பொருட்கள் கிடைத்துள்ளன. 
செங்கல் கால்வாய் கண்டுபிடிப்பு 
இந்நிலையில், நேற்று தொல்லியல் துறையினர் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பழமையான நகரங்கள் இருந்ததற்கான சான்றாக செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இன்னும், சங்ககாலத்தவர்கள் வாழ்ந்ததற்கான, பல்வேறு அரிய வகை பொக்கிஷங்கள் அகழ்வாராய்ச்சியில் கிடைக்க வாய்ப்பு உள்ளது என தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் மற்றும் தொல்லியல் துறையை சேர்ந்த மணிகண்டன் ஆகியோர் தெரிவித்தனர். தொடர்ந்து அகழ்வாராய்ச்சி பணி குழுவினர் இடைவிடாது ஆராய்ச்சி பணிகளை செய்து வருகின்றனர். 
செங்கல் கால்வாய் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து அகழ்வாராய்ச்சி பணியினை பார்வையிட்டு செல்கின்றனர்.

Next Story