தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தாத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை
தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
ஊட்டி
தொழிலாளர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தாவிட்டால் தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
அவசர சிகிச்சை பிரிவு
நீலகிரி மாவட்டம் குன்னூர் லாலி அரசு ஆஸ்பத்திரியில் அவசர சிகிச்சை பிரிவு போதிய பராமரிப்பின்றி காணப்பட்டது. இதனால் மருத்துவ பணியாளர்கள், நோயாளிகள் சிரமம் அடைந்து வந்தனர். இதைத்தொடர்ந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, சீரமைப்பு பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது பணி முழுமை பெற்று விட்டது.
இந்த நிலையில் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு விழா நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு அவசர சிகிச்சை பிரிவை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா விழிப்புணர்வு
குன்னூர் லாலி அரசு ஆஸ்பத்திரி மிகவும் பழமை வாய்ந்தது. இங்கு அரசு ஆஸ்பத்திரியின் அவசர சிகிச்சை பிரிவு சீரமைக்கப்பட்டது. இது குன்னூர் வாழ் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொரோனா தொற்றை பொறுத்தவரை நமது மாவட்டம் முழுகட்டுக்குள் உள்ளது.
இருப்பினும் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இதை வலியுறுத்தி தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
கடும் நடவடிக்கை
மேலும் வெளிமாநில தொழிலாளர்கள் பணிக்காக நீலகிரிக்கு திரும்பி உள்ளனர். இதனால் தடுப்பூசி செலுத்தாத தொழிலாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு உடனடியாக செலுத்த வேண்டும் என நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் அவர்கள் 14 நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்த வேண்டும்.
இந்த உத்தரவை பின்பற்றாத தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.விழாவில் குன்னூர் உதவி கலெக்டர் தீபனா விஷ்வேஸ்வரி, மருத்துவ இணை இயக்குனர் பழனிச்சாமி உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story