பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டரை போராடி மீட்ட விவசாயி
கடன் தவணை தொகையினை செலுத்த காலதாமதம் ஆனதால், தனியார் நிதி நிறுவனம் பறிமுதல் செய்த டிராக்டரை தரையில் படுத்து விவசாயி போராடி மீட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
ஒரத்தநாடு:
கடன் தவணை தொகையினை செலுத்த காலதாமதம் ஆனதால், தனியார் நிதி நிறுவனம் பறிமுதல் செய்த டிராக்டரை தரையில் படுத்து விவசாயி போராடி மீட்டார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
டிராக்டர் வாங்கினார்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டை அடுத்துள்ள பொன்னாப்பூர் மேற்கு கீழத்தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(வயது 37). விவசாயி. இவர் கடந்த 2018-ல் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.4 லட்சத்து 75 ஆயிரம் கடன் உதவி பெற்று ஒரு டிராக்டர் வாங்கினார்.
இதற்காக 3 மாதத்துக்கு ஒரு முறை ரூ.52 ஆயிரம் தவணை தொகை செலுத்த வேண்டும். அதன்படி மொத்தம் உள்ள 12 தவணைகளில் இதுவரை 8 தவணைகளுக்கான தொகையினை சுரேஷ்குமார் சரிவர கட்டினார். .
தற்போது கொரோனா காலகட்டத்தில் வாழ்வாதாரம் பாதிப்படைந்ததாலும், மேலும் உறவினருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாலும் கடந்த 2 தவணைகளுக்கான தொகையினை சுரேஷ்குமாரால் செலுத்த முடியவில்லை.
இதனால் தான் டிராக்டர் வாங்கிய நிதி நிறுவனத்துக்கு சென்று தவணை கட்டுவதற்கு கால அவகாசம் கேட்டுள்ளார்.
தரையில் படுத்து போராட்டம்
இந்தநிலையில் வீட்டில் சுரேஷ்குமார் இல்லாத நேரத்தில், எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல், அவரது வீட்டிற்கு சென்ற நிதி நிறுவன அலுவலர்கள் உள்ளிட்ட சிலர் டிராக்டரை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.
இதனை அறிந்த சுரேஷ்குமார் ஊரச்சி எனும் இடத்தில் டிராக்டரை வழிமறித்து நிறுத்தி தவணை தொகையினை விரைவாக செலுத்தி விடுவதாகவும், எனவே டிராக்டரை தன்னிடம் ஒப்படைக்குமாறும் தனியார் நிதி நிறுவன அலுவலர்களிடம் கேட்டுள்ளார். இதற்கு அவர்கள் சம்மதிக்காததால் டிராக்டருக்கு முன்பு தரையில் படுத்து வாகனத்தை எடுத்து செல்லாதவாறு சுரேஷ்குமார் போராட்டத்தில் ஈடுபட்டார்.
டிராக்டரை அங்கேயே விட்டு சென்றனர்
அப்போது சுரேஷ்குமாருக்கும், நிதி நிறுவன அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் சுரேஷ்குமாரை நிதி நிறுவன அலுவலர்கள் திட்டியதாக தெரிகிறது.
அப்போது அந்த வழியே சென்ற பொதுமக்கள் அங்கு திரண்டதால் நிதி நிறுவன அலுவலர்கள் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு சென்று விட்டனர்.
இதுகுறித்து சுரேஷ்குமார் நிதி நிறுவனத்தில் நேரில் முறையிட்டபோது, கடன் வழங்குவதை மட்டுமே நாங்கள் செய்கிறோம். பணத்தை வசூலிப்பது திருச்சியை சேர்ந்த மற்றொரு குழுவினர் என்று பதிலளித்துள்ளனர்.
புகார் மனு
இதுகுறித்து சுரேஷ்குமார் சம்பந்தப்பட்ட நிதி நிறுவன அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் மனு அனுப்பி உள்ளார்.
இதேபோல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு டிராக்டருக்கு தவணை தொகை செலுத்த காலதாமதம் ஆனதால், பாப்பாநாடு விவசாயி பாலன் என்பவரின் டிராக்டரை தனியார் நிதி நிறுவனத்தினர் வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்தபோது, அவர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Related Tags :
Next Story