கொரோனா பரிசோதனை செய்வதில் பிரச்சினை: திருச்சியில் இருந்து துபாய் விமானம் புறப்படுவதில் காலதாமதம்; 7 மணி நேரம் காத்திருந்த பயணிகள்


கொரோனா பரிசோதனை செய்வதில் பிரச்சினை: திருச்சியில் இருந்து துபாய் விமானம் புறப்படுவதில் காலதாமதம்; 7 மணி நேரம் காத்திருந்த பயணிகள்
x
தினத்தந்தி 13 Aug 2021 2:21 AM IST (Updated: 13 Aug 2021 2:21 AM IST)
t-max-icont-min-icon

பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் திருச்சியில் இருந்து துபாய் விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் 7 மணி நேரம் காத்திருந்தனர்.

செம்பட்டு, 
பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வதில் ஏற்பட்ட பிரச்சினையால் திருச்சியில் இருந்து துபாய் விமானம் புறப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டது. இதனால் பயணிகள் 7 மணி நேரம் காத்திருந்தனர்.

ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை

இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு நாடுகளுக்கு பணி நியமன விசா பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் பணிக்கு வரலாம் எனவும், அவ்வாறு வருபவர்கள் 48 மணி நேரம் முன்பாக அல்லது 72 மணி நேரம் முன்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என்று அந்த நாடுகள் உத்தரவிட்டன. 

இதைத்தொடர்ந்து அரபு நாடுகளுக்கு பயணம் செய்பவர்களுக்கு வசதியாக ஆர்.டி.பி.சி.ஆர். முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள திருச்சி விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி விமானம் புறப்படும் நேரத்துக்கு 4 மணி நேரம் முன்னதாக விமான நிலையத்திற்கு வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம். இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் 5 எந்திரங்கள் மூலம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொண்டு வந்தது. இதை பயன்படுத்தி திருச்சியில் இருந்து அரபு நாடுகளுக்கு சிறப்பு விமானத்தில் பயணிகள் சென்று வந்தனர்.

பரிசோதனை செய்வதில் பிரச்சினை

இந்தநிலையில் திருச்சியில் இருந்து நேற்று காலை 9.30 மணிக்கு ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய்க்கு 101 பயணிகளுடன் புறப்பட தயாராக இருந்தது. அப்போது, துபாயில் உள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் திருச்சியில் உள்ள அந்த விமான நிறுவனத்திற்கு ஒரு கடிதம் அனுப்பியது. 

அந்த கடிதத்தின்படி திருச்சி விமான நிலையத்தில் தனியார் நிறுவனம் வைத்துள்ள 5 எந்திரங்களில் குறிப்பிட்ட 2 எந்திரங்கள் மூலம் எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுவதாகவும், மற்ற 3 எந்திரங்களில் பரிசோதனை மேற்கொள்ள வேண்டாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

விமானம் புறப்படுவதில் தாமதம்

ஒரு எந்திரத்தில் ஒரு மணி நேரத்துக்கு 8 ேபருக்கு மட்டுமே பரிசோதனை செய்ய முடியும் என்பதால், 2 எந்திரங்கள் மூலம் அனைத்து பயணிகளுக்கும் ஆர்.டி.பி.சிஆர். பரிசோதனை செய்ய காலதாமதம் ஆனது. இதனால் துபாய் விமானம் புறப்படுவதிலும் தாமதம் ஏற்பட்டது.

 பின்னர் அனைத்து பயணிகளுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்ட பின்னர் நேற்று மாலை 4.40 மணிக்கு அந்த விமானம் துபாய் புறப்பட்டு சென்றது. இதனால் திருச்சி விமான நிலையத்தில் பயணிகள் 7 மணிநேரம் காத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story