கர்நாடகத்தில் பொது இடங்களில் முகரம், விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை
கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் முகரம், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதலையும் அரசு வெளியிட்டுள்ளது.
பெங்களூரு: கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது இடங்களில் முகரம், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான வழிகாட்டுதலையும் அரசு வெளியிட்டுள்ளது.
கொரோனா 3-வது அலை
கர்நாடகத்தில் முதல் அலையை காட்டிலும் கொரோனா 2-வது அலை பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. அந்த சமயத்தில் தினசரி பாதிப்பு 50 ஆயிரமாக இருந்தது. இதனால் கொரோனா பரவலை தடுக்க அரசு ஊரடங்கை தீவிரப்படுத்தியது. இதன் விளைவாக கர்நாடகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்தது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் செய்யப்பட்டன.
இருப்பினும் கொரோனா 2-வது அலை கட்டுக்குள் இருந்தது. இந்த நிலையில் அண்டை மாநிலங்களான கேரளா, மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதனால் அங்கு இருந்து வந்தவர்கள் மூலம் கர்நாடகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஆரம்பித்து உள்ளது. இது கொரோனா 3-வது அலை அலைக்கு முன்னோட்டமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
வார இறுதி ஊரடங்கு
இந்த நிலையில் கொரோனா பரவலை தடுக்க கர்நாடகம் முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் கேரளா, மராட்டியத்தின் எல்லையில் உள்ள குடகு, சாம்ராஜ்நகர், தட்சிண கன்னடா, பெலகாவி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும் கேரளா, மராட்டியத்தின் எல்லையில் உள்ள கர்நாடக பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளா, மராட்டியத்தில் இருந்து வருபவர்கள் 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை நெகட்டிவ் அறிக்கையை கொண்டு வர வேண்டும் என்றும் கர்நாடக அரசு கூறியுள்ளது. மேலும் கர்நாடகத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 100 பேருக்கு மேல் கூடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
முகக்கவசம் கட்டாயம்
இந்த நிலையில் வருகிற 20-ந் தேதி முகரம் பண்டிகையும், அடுத்த மாதம் (செப்டம்பர்) 10-ந்தேதி விநாயகர் சதுர்த்தி விழாவும் கொண்டாடப்பட உள்ளது. கொரோனா 3-வது அலை பரவி வருவதால், முகரம், விநாயகர் சதுர்த்தி விழாவை பொது இடங்களில் கொண்டாட கர்நாடக அரசு தடை விதித்துள்ளது.
இதுதொடர்பாக கர்நாடக அரசு ஒரு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
முகரம் பண்டிகையின்போது சிறப்பு தொழுகை செய்யவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்படுகிறது. முகரம் பண்டிகையை கொண்டாடுபவர்கள், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் எந்த வகையான கொண்டாட்டத்திற்கும் அனுமதி இல்லை. தொழுகை கூட்டங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்.
விநாயகர் சதுர்த்தி
60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொழுகைகளில் பங்கேற்க அனுமதி இல்லை. பொது இடங்களில் ஒருவரையொருவர் கட்டி அணைத்து வாழ்த்து கூறுவதை தவிர்க்க வேண்டும்.
அதுபோல் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை பொதுமக்கள் தங்களின் வீடுகளில் கொண்டாட வேண்டும். பொது இடங்களில் பந்தல் போட்டு விநாயகர் சிலையை வைக்க அனுமதி கிடையாது.
ஒத்துழைக்க வேண்டும்
விநாயகர் சிலையை கரைக்கும்போது ஊர்வலமாக வர அனுமதி இல்லை. விநாயகர் சிலைகளை முடிந்தவரை வீடுகளிலேயே கரைக்க வேண்டும். இல்லாவிட்டால் மிக அருகில் உள்ள குளங்கள், ஏரிகள் அல்லது நடமாடும் குளத்தில் கரைக்கலாம். விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் கோவில்களில் சானிடைசர் திரவம் மூலம் தூய்மைப்படுத்த வேண்டும். இந்த பண்டிகையின்போது சமூக நல்லிணக்கம், அமைதியை காக்க அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் அரசு கூறியுள்ளது.
Related Tags :
Next Story