முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.
நாகர்கோவில்:
உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார்.
ஆய்வுக்கூட்டம்
குமரி மாவட்டத்தில் பல்வேறு துறைகள் மூலம் நடைபெற்றுவரும் பணிகள் குறித்து உயர்மட்ட அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார்.
இதில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை (கட்டிடம், நீர்வளம்), ஊரக வளர்ச்சி முகமை, மகளிர் திட்டம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள். ஊராட்சிகள், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை, கால்நடைத்துறை உள்பட பல்வேறு துறைகள் சார்பில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது கலெக்டர் அரவிந்த் பேசியதாவது:-
உறுதி செய்ய வேண்டும்
வருவாய்த்துறை மூலம் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள், நாகர்கோவில் மாநகராட்சி மூலம் நடைபெற்றுவரும் பாதாள சாக்கடை திட்டப்பணி, குமரியில் பழுதடைந்த சாலைகளை செப்பனிடும் பணிகள் விரைவில் முடிக்க வேண்டும். பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி குடிநீர் வழங்க துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவசாயிகள் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
மேலும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் கீழ் நடைபெற்றுவரும் பணிகள், பொதுப்பணித்துறை வாயிலாக நடைபெற்றுவரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். குழித்துறை, குளச்சல், பத்மநாபபுரம் நகராட்சிகள், அனைத்து பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் நடைபெறும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைவில் முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும். வளர்ச்சி பணிகளை ஆய்வு மேற்கொண்டு, அதன் தரத்தினை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி, பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சிவகுரு பிரபாகரன், திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) தனபதி, நாகர்கோவில் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வீராசாமி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story