வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை


வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 13 Aug 2021 4:22 AM IST (Updated: 13 Aug 2021 4:22 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில், மனைவியின் கையை பிடித்து இழுத்ததால் வடமாநில தொழிலாளியை அடித்துக்கொன்ற, கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

அன்னதானப்பட்டி, ஆக.13-
சேலத்தில், மனைவியின் கையை பிடித்து இழுத்ததால் வடமாநில தொழிலாளியை அடித்துக்கொன்ற, கணவர் போலீசில் சரண் அடைந்தார்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தொழிலாளி
சேலம் சீலநாயக்கன்பட்டி ஊத்துக்காடு தட்சிணாமூர்த்தி கோவில் பகுதியை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 49). மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் பீமலண்டு மண்டல். இவரது மகன் பிரசன்குமார் மண்டல் (37). 
பனமரத்துப்பட்டியில் உள்ள ஒரு தனியார் கிரானைட் நிறுவனத்தில் சுந்தரம், பிரசன்குமார் மண்டல் ஆகியோர் கூலி தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர். நண்பர்களான இருவரும் அடிக்கடி ஒன்றாக மது குடிப்பதை வழக்கமாக வைத்து இருந்தனர். 
நேற்று முன்தினம் இரவு 2 பேரும் மது குடித்து உள்ளனர். பின்னர் சுந்தரம் வீட்டுக்கு சென்றார். இரவு 11 மணி அளவில் பிரசன்குமார் மண்டல், சுந்தரத்தின் வீட்டுக்கு வந்தார். பின்னர் இருவரும் வீட்டிலேயே அமர்ந்து மீண்டும் மது குடித்து உள்ளனர்.
அடித்துக்கொலை
பின்னர் நள்ளிரவு 12 மணி அளவில் மது போதவில்லை என்று கூறி சுந்தரத்திடம், பிரசன்குமார் மண்டல் ரூ.100 கொடுத்து மது வாங்கி வரும் படி கூறியுள்ளார். இதையடுத்து அவர் வீட்டில் இருந்து வெளியில் சென்றார். அப்போது பிரசன்குமார் மண்டல் அங்கு தூங்கிக்கொண்டிருந்த சுந்தரத்தின் மனைவியின் கையை பிடித்து இழுத்து உள்ளார். இதில் அவர்களுக்குள் தள்ளு, முள்ளு ஏற்பட்டது.
இந்த நிலையில், வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த சுந்தரம், தனது மனைவியின் கையை பிடித்து இழுத்துக்கொண்டிருந்த பிரசன்குமார் மண்டலை பார்த்ததும் ஆத்திரம் அடைந்தார். உடனே அவர் வீட்டின் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து பிரசன்குமார் மண்டலை சரமாரியாக அடித்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடி, துடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
போலீசில் சரண்
பின்னர் சுந்தரம் நேற்று காலை வட மாநிலத்தை சேர்ந்த ஒருவரை அடித்துக்கொலை செய்து விட்டேன் என்று கூறி அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரசன்குமார் மண்டலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து பெண்ணின் கையை பிடித்து இழுத்ததால் கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன பிரசன்குமார் மண்டலுக்கு ராக்கி என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

Next Story