இருப்பிடம் தேடிச்சென்று பழங்குடியின மக்களின் குறைகளை கேட்டறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு
பழங்குடியின மக்களின் இருப்பிடம் தேடிச்சென்று குறைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கேட்டறிந்தார். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவள்ளூர்,
தமிழகத்தின் எல்லையோர மாவட்டங்களில் நக்சலைட் மற்றும் மாவோயிஸ்டுகளை கண்காணிக்கவும், அவர்களது நடவடிக்கைகளை ஒடுக்கவும் வேண்டி கடந்த 2017-ம் ஆண்டு தமிழக அரசால் நக்சல் தடுப்பு பிரிவு ஏற்படுத்தப்பட்டது.
மேற்படி நக்சல் தடுப்பு பிரிவினர் நக்சல் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது மட்டுமல்லாமல், மிகவும் நலிவுற்ற மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு பட்டா மற்றும் ஆதார் கார்டு போன்ற அரசு சலுகைகள் சென்று சேர உதவி செய்து வருகின்றனர். அவ்வாறாக திருவள்ளூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவினர் மூலம் இதுவரை 13 பழங்குடியின மக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கு சென்று பட்டாக்களும், சுமார் 10 பழங்குடியின மக்களுக்கு ஆதார் கார்டுகளும் பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி கொரோனா பேரிடர் காலத்தில் பழங்குடியினர் மற்றும் மலைவாழ் மக்களுக்கு உணவு பொருட்களை தங்களது சொந்த செலவில் இலவசமாக நக்சல் தடுப்பு பிரிவினர் வழங்கி வருகின்றனர். அதேபோல தற்போது பென்னலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கூடியம் கிராமத்தை தேர்ந்தெடுத்து உணவுப்பொருட்கள் வழங்க இருப்பதை பற்றி அறிந்த திருவள்ளூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் வருண்குமார் திருவள்ளூர் மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவினரின் சிறந்த சேவையை அங்கீகரிக்கும் வண்ணம் தாமும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் 55 பழங்குடியின இருளர் குடும்பங்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கினார். மேலும் அந்த மக்களிடையே கலந்துரையாடி குறைகளை கேட்டறிந்தார்.
Related Tags :
Next Story