மீன் பிடிக்கும்போது வடநெம்மேலி பக்கிங்காம் கால்வாய் சேற்றில் சிக்கி ஒருவர் சாவு
வடநெம்மேலி பண்ணையில் உள்ள முதலைகளுக்கு தீனி வழங்குவதற்காக பக்கிங்காம் கால்வாயில் மீன் பிடித்து கொண்டிருந்தவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தார்.
மாமல்லபுரம்,
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வடநெம்மேலி பகுதியை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள பக்கிங்காம் கால்வாயில் தினமும் மீன் பிடித்து வடநெம்மேலி பண்ணையில் உள்ள முதலைகளுக்கு தீனியாக வழங்கி மீன் பிடிக்கும் தொழில் செய்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று வடநெம்மேலி மாதா கோவில் தெருவை சேர்ந்த லோகநாதன் (வயது 53) என்பவர் வழக்கம் போல் பக்கிங்காம் கால்வாயில் வலை விரித்து முதலைகளுக்கு தீனி வழங்குவதற்காக மீன் பிடித்து கொண்டிருந்தார்.
கரை பகுதியில் வலையில் போதிய மீன்கள் சிக்காததால் ஆழமான பகுதிக்கு சென்று மீன் பிடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் சேற்றில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவர் அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த அந்த பகுதியை சேர்ந்த சக நண்பர்கள் சிலர் மாமல்லபுரம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று தண்ணீரில் மிதந்து கொண்டிருந்த அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Related Tags :
Next Story