நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ரூ.22 கோடி ஒதுக்கீடு. கலெக்டர் முருகேஷ் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டதை உயர்த்த ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் முருகேஷ் தெரிவித்தார்.
கலசபாக்கம்
பண்ணைக்குட்டை
துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம், சீலப்பந்தல் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் பண்ணை குட்டைகள் அமைக்கும் பணியினை கலெக்டர் பா.முருகேஷ் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
40½ கோடி லிட்டர் தண்ணீர்
திருவண்ணாமலை மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் மாவட்டம் முழுவதும் 1,243 பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட உள்ளது. முதல்முறையாக சீலப்பந்தல் ஊராட்சியில் தொடங்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு பண்ணை குட்டையும் 72 அடி நீளம், 36 அடி அகலம், 5 அடி ஆழம் கொண்டதாக அமைக்கப்படும். இதில் சுமார் 3,63,000 லிட்டர் மழைநீரினை தேக்கி வைக்க முடியும்.
விவசாயிகளுக்கு சொந்தமான நிலங்களில் பண்ணைக் குட்டைகளை உருவாக்கி அவர்களிடமோ அல்லது தமிழக அரசிடமோ ஒப்படைக்கப்பட உள்ளது. இந்த பண்ணைக்குட்டைகள் அமைக்கப்பட்டால் 40 கோடியே 58 லட்சம் லிட்டர் தண்ணீரினை தேக்கி வைக்க முடியும். வீணாக ஆவியாகும் மழை நீரினை இவ்வாறு தேக்கி வைத்தால் குடிதண்ணீர் தேவையில் தன்னிறைவடைந்த பகுதியாக திருவண்ணாமலை மாவட்டம் மாற உதவியாக இருக்கும்.
முழு மானியம்
மேலும் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து விவசாயத்திற்கும், விவசாய பெருமக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக மாறிவிடும். இந்த பண்ைணக்குட்டை அமைப்பதன் மூலம் கோடை காலங்களில் தண்ணீர் இல்லாத நேரங்களில் பண்ணை குட்டைகளில் உள்ள நீரை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள உதவியாக இருக்கும். மேலும், இந்த பண்ணைக் குட்டை பயனாளிகளுக்கு முழு மானியத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் பிரதாப், உதவி கலெக்டர் (பயிற்சி) கட்டா ரவி தேஜா, துரிஞ்சாபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story