தேனி மாவட்டத்தில் 17 கஞ்சா வியாபாரிகள் உள்பட 25 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தேனி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 17 கஞ்சா வியாபாரிகள் உள்பட 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்கவும், கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கவும் மாவட்ட போலீஸ் துறை சார்பில் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதில் ஒரு பகுதியாக கொடுங்குற்றங்கள் மற்றும் தொடர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வரும் நபர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டு இதுவரை 25 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைக்காவலில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களில், 17 பேர் கஞ்சா வியாபாரிகள் ஆவார்கள். கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டதால் அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
தொடர் நடவடிக்கை
அதுபோல் கொலை வழக்குகளில் கைது செய்யப்பட்ட 7 பேர் மீதும், தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட ஒருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இனி வரும் காலங்களில் கஞ்சா விற்பனை மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர், திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அனைத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்த நபர்கள் வேறு குற்றங்களில் ஈடுபடுகிறார்களா? என்றும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இத்தகவலை தேனி போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story