நெருக்கடியான பொருளாதார சூழலில் ஏழை நடுத்தர வர்க்கத்தை பாதிக்காத பட்ஜெட் தேனி மாவட்ட மக்கள் கருத்து


நெருக்கடியான பொருளாதார சூழலில் ஏழை நடுத்தர வர்க்கத்தை பாதிக்காத பட்ஜெட் தேனி மாவட்ட மக்கள் கருத்து
x
தினத்தந்தி 13 Aug 2021 7:33 PM IST (Updated: 13 Aug 2021 7:59 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பட்ஜெட் ஏழை, நடுத்தர வர்க்கத்தை பாதிக்காத பட்ஜெட் என தேனி மாவட்ட மக்கள் கருத்து தெரிவித்தனர்.


தேனி:
தமிழகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு சட்டமன்றத்தில் முதல் பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதிஅமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்தனர். அதன் விவரம் வருமாறு:-
குலாம்நத்தர் (ஓய்வு பெற்ற பேராசிரியர், உத்தமபாளையம்):- கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த கால கட்டத்தில் ஏழை, நடுத்தர மக்கள் பாதிக்காத வகையில் சிறப்பான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில கல்விக்கொள்கை உருவாக்கம், அடிப்படை கல்வி அறிவு மற்றும் கணித அறிவை உறுதி செய்ய எண்ணும் எழுத்தும் இயக்கம், அரசு பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் என வரவேற்கத்தக்க அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 10 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு கல்லூரியை கம்பம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அமைக்க வேண்டும்.
ராஜகணேசன் (ஆயத்த ஆடை தயாரிப்பாளர், கம்பம்) :- தேனி மாவட்டத்தில் உணவு பூங்கா, புதிய சிப்காட் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக அமைக்கப்படும் சிப்காட்டில் ஜவுளிபூங்கா அமைத்து கொடுத்தால் கம்பம் பகுதியில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இதன் மூலம் கம்பத்தில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். உயிரை பணயம் வைத்து கேரளாவுக்கு பெண்கள் கூலி வேலைக்கு செல்வதை தவிர்த்து அவர்களுக்கு இங்கேயே வேலைவாய்ப்பு  கிடைக்க வாய்ப்புள்ளது. கவர்ச்சிகரமான அறிவிப்பு இல்லை என்றாலும் கவனம் ஈர்த்த பட்ஜெட் இது.

தாயின் அரவணைப்பு
ராமதிலகம் (முதுகலை ஆசிரியை, பள்ளப்பட்டி) :- இன்றைய கால கட்டத்தில் பெண்கள் பணிக்கு செல்வது அதிகரித்துள்ளது. அரசு பணிகளில் இருப்பவர்கள் குழந்தைகளை வளர்ப்பது சவாலாக உள்ளது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிகவும் அவசியம். ஆனால், வெளியூர்களில் பணியாற்றும் பெண்கள் தங்களின் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதை 7 அல்லது 8 மாதங்களிலேயே நிறுத்தும் துரதிர்ஷ்ட நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். மகப்பேறு விடுமுறையை 9 மாதத்தில் இருந்து ஒரு ஆண்டாக உயர்த்தி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது. இதன் மூலம் குழந்தைகளை தாயின் அரவணைப்பில் ஆரோக்கியமான சூழலில் வளர்க்க முடியும். பணியின் போது உயிரிழக்கும் அரசு ஊழியரின் குடும்பத்துக்கு குடும்ப பாதுகாப்பு நிதியில் இருந்து வழங்கப்படும் உதவி மானியம் ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டதும் வரவேற்கத்தக்கது.
செல்வி (மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர், உத்தமபாளையம்):- கூட்டுறவு சங்கங்கள் மூலம் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மகளிர் குழுவினர் நகை அடகு வைத்த கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுத்து வருவது வரவேற்கத்தக்கது. இதனால், பெண்களின் உழைப்பை நம்பி வாழும் குடும்பங்கள் மிகவும் பயன்பெறும்.

பெட்ரோல் விலை குறைப்பு
யாஸ்மின் ராணி (குடும்பத்தலைவி, கம்பம்):- குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மிகவும் ஏழ்மையானவர்களுக்கான திட்டம் என்றும், சரியான பயனாளிகளுக்கு அது வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. ஏற்கனவே தமிழகம் நிதிச்சுமையில் சிக்கி தவிக்கிறது. இந்த நேரத்தில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இன்றி பட்ஜெட் தாக்கல் செய்து இருப்பது சிறப்பானது. பூங்காக்கள், விளையாட்டு திடல்கள், வெள்ள நீர் வடிகால்கள் போன்றவற்றை பராமரிக்க நகர்ப்புற ஏழைகளை பணியில் ஈடுபடுத்தும் திட்டத்தால் பலருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
செல்வம் (ஆட்டோ டிரைவர், தேனி):- பட்ஜெட்டில் பெட்ரோல் விலை ரூ.3 குறைக்கப்பட்டுள்ளது. இது நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கும். அதே நேரத்தில், டீசல் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. டீசல் விலை குறைக்கப்பட்டால் ஆட்டோ, வாடகை வாகன ஓட்டுனர்கள் பயன்பெறுவார்கள். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வும் கட்டுப்படுத்தப்படும். எனவே, டீசல் விலையையும் குறைக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story