ஆடி கடைசி வெள்ளியில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
ஆடி கடைசி வெள்ளியில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன்
கோவை
கொரோனா காரணமாக வழிபாட்டுத்தலங்கள் மூடப்பட்டு இருந்ததால், ஆடி கடைசி வெள்ளியில் சிறப்பு அலங்காரத்தில் அம்மனை தரிசிக்க முடியாமல் வாசலில் நின்று பக்தர்கள் வழிபட்டனர்.
வழிபாட்டுத்தலங்கள் மூடல்
கோவையில் தற்போது கொரோனா தாக்கம் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மேலும் 3-வது அலை குறித்த அச்சம் மக்களிடம் எழுந்துள்ளது.
எனவே கொரோனா பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய 3 நாட்கள் வழிபாட்டுத்தலங்களை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.
அதன்படி கடந்த வாரம் அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன.
இந்த வாரமும் கோவில், மசூதிகள், தேவாலயங்கள், ஜெயின் கோவில்கள் மூடப்பட்டன. ஆனாலும் நேற்று ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் கோவில்களுக்கு வந்து கோபுர தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
வாசலில் நின்று வழிபாடு
கோவை கோனியம்மன் கோவில் பிரதான கதவு மூடப்பட்டு, இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டு இருந்தது. அங்கு வந்த பக்தர்கள் கோவில் வாசலில் நின்று கோபுர தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
சிலர் தாங்கள் கொண்டு வந்த பூக்களை கதவில் ைவத்து சூடம் ஏற்றி வழிபட்டனர். மாலையில் பக்தர்கள் இன்றி ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
ஆடி வெள்ளியையொட்டி செட்டிவீதியில் உள்ள வன பத்ரகாளி பேச்சியம்மன் கோவிலில், பத்ரகாளி அம்மன் அலங்காரத்திலும்,
பெரியகடைவீதி மாகாளி அம்மன் கோவிலில் ஆயிரம் கிலோ காய் கறிகளால் பாரதமாதா அலங்காரத்திலும்,
தியாகி குமரன் மார்க்கெட் வீதியில் உள்ள பிளேக் மாரியம்மன் கோவிலில் உமாமகேஸ்வரி அலங்காரத்திலும் அம்மன் அருள் பாலித்தார்.
கோவை நல்லாம் பாளையத்தில் உள்ள ஞான மூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் கோவிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
வழிகாட்டி நெறிமுறை
இதேபோல் தண்டுமாரியம்மன் கோவிலுக்கு வந்த பக்தர்களும் வெளியில் நின்று கோபுர தரிசனம் செய்து திரும்பினர்.
பச்சாபாளை யம் உள்பட ஊரக பகுதிகளில் உள்ள குலதெய்வம் கோவில்களில் பொதுமக்கள் சிலர் கற்பூரம் ஏற்றி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.
அப்போது பொது மக்கள் முகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளி யை கடைபிடித்தல் போன்ற கொரோனா வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றினர்.
வழக்கமாக ஆடி கடைசி வெள்ளிக்கிழமையன்று அம்மன் கோவில்களில் பெண்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். நேற்று கோவில்கள் மூடப்பட்டதால் கோவில்கள் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதேபோல் பூ மார்க்கெட்டில் உள்ள ஐதர் அலி திப்பு சுல்தான் தக்னி சுன்னத் ஜமாஅத் மசூதி உள்பட மாவட்டம் முழுவதும் மசூதிகள் மூடப்பட்டு இருந்தன. இஸ்லாமியர்கள் வீடுகளில் தொழுகை நடத்தினர்.
Related Tags :
Next Story