நகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்ட அதிகாரிகள்


நகராட்சிக்கு சொந்தமான இடத்தை மீட்ட அதிகாரிகள்
x
தினத்தந்தி 13 Aug 2021 8:23 PM IST (Updated: 13 Aug 2021 8:23 PM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடத்தை அதிகாரிகள் மீட்டனர்.

கொடைக்கானல்: 

கொடைக்கானல் ஆனந்தகிரி பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 1¼ ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடத்தை தனிநபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அவருடைய குத்தகை காலம் முடிந்தும், அந்த நிலத்தை ஒப்படைக்காமல் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து நிலத்தை மீட்க நகராட்சி அதிகாரிகள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 

அந்த வழக்கில் நகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கூறப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த ஆக்கிரமிப்பை நகாரட்சி நிர்வாகம் அகற்றியது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட அந்த நபர் நகராட்சிக்கு எதிராக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நகராட்சிக்கு சாதகமாக மீண்டும் ஐகோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது. 

இதை தொடர்ந்து நேற்று நகராட்சி ஆணையாளர் நாராயணன் தலைமையில் நகரமைப்பு அலுவலர் அப்துல்நாசர், ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் நகராட்சி அதிகாரிகள் நேரில் சென்று அந்த இடத்தை மீ்ட்டனர். அங்கு போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் அந்த இடத்தை சீரமைக்கும் பணியை மேற்கொண்டனர். 

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு சுமார் ரூ.12 கோடி ஆகும். இந்த இடத்தில் உடற்பயிற்சி கூடம் மற்றும் யோகா பயிற்சி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளது என்றனர். 


Next Story