கோவில்கள் முன்பு குவிந்த பக்தர்கள்


கோவில்கள் முன்பு குவிந்த பக்தர்கள்
x

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்கள் முன்பு ஏராளமான பக்தர்கள் குவிந்து, விளக்கேற்றி வழிபட்டனர்.

திண்டுக்கல்: 

கடைசி வெள்ளிக்கிழமை
அம்மனுக்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். மேலும் கோவிலில் விளக்கேற்றி சாமி கும்பிடுவார்கள். இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கோவில்களை வாரத்தின் கடைசி 3 நாட்கள் மட்டும் அடைக்க அரசு உத்தரவிட்டது. 

அதன்படி வார நாட்களில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை கோவில்கள் பூட்டப்படுகின்றன. இதனால் ஆடி மாத செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள், பூட்டிய கோவில்கள் முன்பு விளக்கேற்றி வழிபட்டனர். 


இந்தநிலையில் ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் இன்றி சிறப்பு பூஜை மற்றும் அலங்காரம் நடைபெற்றது. இருப்பினும் கோவில்கள் முன்பு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.

விளக்கேற்றி வழிபாடு
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அப்போது அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். ஆனால் கோவில் பூட்டப்பட்டு இருந்ததால், பூட்டிய கதவின் முன்பு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டனர்.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலும் பக்தர்கள் இன்றி சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், வளையல் அலங்காரம் நடைபெற்றது. மேலும் திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில், திண்டுக்கல் கவடக்கார தெரு காளியம்மன் கோவில், வி.எம்.ஆர்.பட்டி காளியம்மன் கோவில், திண்டுக்கல் எம்.வி.எம். நகர் தென்திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் பத்மாவதி அம்மன் சன்னதி உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து அம்மன் கோவில்கள் சிறப்பு பூஜை மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. 

பக்தர்களுக்கு கூழ்
நத்தம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் இன்றி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அப்போது பக்தர்கள் ஏராளமானோர் கோவில் முன்பு திரண்டு விளக்கேற்றி வழிபட்டனர். அப்போது பக்தர்களுக்கு கூழ் வழங்கப்பட்டது. 


பழனி தெற்கு கிரிவீதியில் உள்ள வனதுர்க்கை அம்மன் கோவில் முன்பு பக்தர்கள் குவிந்து வழிபாடு செய்தனர். இதேபோல் பழனி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களிலும், பட்டிவீரன்பட்டி, வேடசந்தூர், நிலக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 

Next Story