பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு


பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு
x
பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு
தினத்தந்தி 13 Aug 2021 9:12 PM IST (Updated: 13 Aug 2021 9:12 PM IST)
t-max-icont-min-icon

பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு

பொள்ளாச்சி

பரம்பிக்குளம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் சர்க்கார்பதி மின் உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது. அங்கு மின் உற்பத்தி செய்த பின் காண்டூர் கால்வாய் மூலம் திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்த அணை மூலம் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 இதை தவிர குடிநீர் தேவைக்கும் தண்ணீர் திறக்கப்படுகிறது. இதற்கிடையில் 4 மண்டலங்களாக பிரித்து பி.ஏ.பி. பிரதான கால்வாய் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. கடந்த 3-ந்தேதி 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் பி.ஏ.பி. பிரதான கால்வாயில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு, சீரமைப்பு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 

மேலும் பி.ஏ.பி. கண்காணிப்பு பொறியாளர் முத்துசாமி மேற்பார்வையில் செயற்பொறியாளர் பழனிவேல் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது உதவி செயற்பொறியாளர் புவனேஷ்வரி, உதவி பொறியாளர் ராஜன் ஆகியோர் உடன் இருந்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது

திருமூர்த்தி அணையில் இருந்து திருப்பூர் மாவட்டம் காங்கயம் வரை பி.ஏ.பி. பிரதான கால்வாய் 126 கிலோ மீட்டர் தூரம் கொண்டது. இந்த கால்வாயில் வினாடிக்கு 850 கன அடி தண்ணீர் பாசனத்திற்கு திறக்கப்பட்டது. இந்த நிலையில் பொள்ளாச்சி அருகே கெடிமேட்டில் 20.800-வது கிலோ மீட்டரில் நேற்று முன்தினம் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகுவதாக தகவல் கிடைத்தது. 

இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து காலை 11 மணிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறப்பது படிப்படியாக குறைக்கப்பட்டது. மாலை 6 மணிக்கு கால்வாயில் தண்ணீர் செல்வது முழுமையாக நிறுத்தப்பட்டது. கால்வாயின் கீழ் பகுதியில் மழைநீர் குழாய் செல்கிறது. 

இதன் காரணமாக தண்ணீரின் அழுத்தம் ஏற்பட்டு கால்வாயின் தடுப்பு சுவரில் 5 அடி ஆழத்திற்கு ஓட்டை விழுந்து உள்ளது. தண்ணீரை உடனடியாக நிறுத்தியதால் பெரிய அளவில் சேதம் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது. 

தற்போது கான்கீரிட் கொண்டு உடைப்பை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை முழுமையாக முடித்து நாளை (இன்று) அணையில் இருந்து மீண்டும் தண்ணீர் திறக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story