சின்னமனூரில் பயங்கரம் சேலையால் கழுத்தை இறுக்கி மனைவி கொலை உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய முன்னாள் ராணுவவீரர் கைது
சின்னமனூரில் சேலையால் கழுத்தை இறுக்கி மனைவியை கொலை செய்து விட்டு, உடல்நலக்குறைவால் இறந்ததாக நாடகமாடிய முன்னாள் ராணுவவீரர் கைது செய்யப்பட்டார்.
சின்னமனூர்:
தேனி மாவட்டம் சின்னமனூர் பி.டி.ஆர். வாய்க்கால் அருகே காந்திநகர் காலனி பகுதியில் வசித்து வருபவர் நடராஜன் (வயது 57). முன்னாள் ராணுவ வீரர். அவருடைய மனைவி சாந்தி (55). இந்த தம்பதிக்கு 4 மகள்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நடராஜன் அடிக்கடி மது குடித்து விட்டு சாந்தியுடன் தகராறு செய்தார். அதன்படி நேற்று முன்தினம் இரவு நடராஜன் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கும், சாந்திக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் வாக்குவாதம் முற்றி இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.
கழுத்தை இறுக்கி கொலை
இதைத்தொடர்ந்து நடராஜன் ஆத்திரத்தில், சேலையால் சாந்தியின் கழுத்தை இறுக்கியதாக கூறப்படுகிறது. இதில் சாந்தி மயக்கம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சாந்தியை சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார்.
ஆனால் அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சாந்தி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்தநிலையில் சாந்திக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், அவரை சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சேர்த்ததாகவும், அங்கு சிகிச்சை பலனின்றி சாந்தி இறந்து விட்டதாகவும் உறவினர்களிடம் நடராஜன் கூறினார். ஆனால் அவர் கூறியதை உறவினர்கள் நம்பவில்லை.
கைது-பரபரப்பு
இதுகுறித்து உத்தமபாளையத்தை சேர்ந்த சாந்தியின் தம்பி மணிகண்டன், சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சாந்தியின் கழுத்துப்பகுதியில் காயங்கள் இருந்தன.
இதனையடுத்து நடராஜனை பிடித்து போலீசார் துருவித்துருவி விசாரணை நடத்தினர். அப்போது அவர் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சேலையால் சாந்தியின் கழுத்தை இறுக்கியதில் அவர் இறந்ததாகவும், வெளியில் தெரியாமல் இருப்பதற்காக உடல்நலக்குறைவால் சாந்தி இறந்ததாக நாடகமாடியதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நேற்று நடராஜனை கைது செய்தனர். மனைவியை கொலை செய்துவிட்டு முன்னாள் ராணுவவீரர் நாடகமாடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story