அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை


அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 13 Aug 2021 11:16 PM IST (Updated: 13 Aug 2021 11:17 PM IST)
t-max-icont-min-icon

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. வாயில்கள் மூடப்பட்டு இருந்ததால், வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

ஊட்டி,

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. வாயில்கள் மூடப்பட்டு இருந்ததால், வெளியில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோவில்கள் மூடல்

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய 3 கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நேற்று லோயர் பஜார் சுப்ரமணியசுவாமி கோவில், இரட்டை பிள்ளையார் கோவில், வேணுகோபால சுவாமி கோவில், எல்க்ஹில் முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் நடை சாத்தப்பட்டு இருந்தது. இன்று(சனிக்கிழமை) நாளை(ஞாயிற்றுக்கிழமை) கோவில்கள் மூடப்படுகிறது. இருப்பினும் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெறும்.

இதேபோல் ஊட்டியில் சின்ன பள்ளிவாசல், பெரிய பள்ளிவாசல் மற்றும் பிற பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெறவில்லை. மேலும் அங்கு அரசு உத்தரவின்படி 3 நாட்கள் தொழுகைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என்று தகவல் பலகை வைக்கப்பட்டு இருந்தது. மேலும் நாளை தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

வெளியில் நின்று தரிசனம்

இதற்கிடையில் நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நீலகிரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட பொக்காபுரம் மாரியம்மன், மேல் கூடலூர் சந்தைக்கடை மாரியம்மன், மங்குழி பகவதி அம்மன், ஊட்டி மாரியம்மன் கோவில் உள்பட 17 கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மேலும் கூடலூர் அருகே கம்மாத்தி சிந்தாமணி வாகேஸ்வரி மூகாம்பிகை, சிவசண்முக நகரில் உள்ள நாகராஜா உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது.

இதேபோன்று கோத்தகிரி பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பூசாரிகள் மட்டும் கோவிலை திறந்து ஆகம விதிகளின்படி அபிஷேக, அலங்கார பூஜைகளை நடத்தினர். 
டானிங்டன் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. கடைவீதி மாரியம்மன் கோவில் மற்றும் பண்ணாரி அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. ஆனால் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் கோவில்களுக்கு வெளியே நின்று தரிசனம் செய்தனர்.


Next Story