கோவிலுக்கு சென்றபோது லாரி மீது கார் மோதி ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் பலி
சந்தவாசல் அருகே குலதெய்வம் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது கார் டயர் வெடித்து லாரி மீது மோதிய விபத்தில் 3 மாத குழந்தை உள்பட 7 பேர் பரிதாபமாக இறந்தனர்.
கண்ணமங்கலம்,
வேலூர் மாநகராட்சி விருப்பாட்சிபுரம் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 55). இவர் தனது மனைவி கலா (50) தாய் முனியம்மாள் (70), மகன் சசிகுமார் (24), மருமகள் பரிமளா (20) சசிகுமாரின் 3 மாத குழந்தை நிஷா, உறவினர்கள் சோழவரம் சுதாகர் மனைவி கோமதி (26), இவர்களின் 3½ வயது மகன் குமரன், பச்சியப்பன் மனைவி ராதிகா (45), கோதண்டன் மனைவி மாலதி (45), கன்னியப்பன் மகள் பூர்ணிமா (21) ஆகிய 11 பேர் ஒரே காரில் நேற்று வீட்டில் இருந்து குலதெய்வம் கோவிலில் சாமி கும்பிட திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் புதூர் மாரியம்மன் கோவிலிலுக்கு சென்றனர். காரை சசிகுமார் ஓட்டினார்.
மேலும் மோட்டார் சைக்கிளில் சோழவரம் சுதாகர் (30) தனது மகன் சஞ்சய் (8), பச்சியப்பன் மகன் நவீன் (13) ஆகிய 3 பேர் தனியாக முன்னே சென்றனர்.
சந்தவாசல் முனியந்தாங்கல் கூட்ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென காரின் டயர் வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார் எதிரே நெல்மூட்டைகளை ஏற்றி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மூர்த்தி, கலா, பரிமளா, 3 மாத குழந்தை நிஷா, முனியம்மாள், கோமதி ஆகிய 6 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
கார் டிரைவர் சசிகுமார், மாலதி, ராதிகா, பூர்ணிமா, குமரன் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த நிைலயில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ராதிகா பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவலறிந்த மோட்டார் சைக்கிளில் சென்ற சுதாகர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார். ஆரணி துணை போலீஸ் சூப்பிரண்டு கோட்டீஸ்வரன், இன்ஸ்பெக்டர் சசிகுமார், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை பறிமுதல் செய்தனர். லாரி டிரைவரிடம் சந்தவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இறந்தவர்கள் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நிகழ்ந்த கார் 5 அல்லது 6 பேர் பயணம் செய்யக்கூடியது. ஆனால் 11 பேர் பயணம் செய்ததால் காரின் டயர் அழுத்தம் காரணமாக வெடித்து இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.
குல தெய்வ வழிபாடு செய்ய சென்றபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story