3 கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று குறை கேட்ட கலெக்டர்


3 கிலோமீட்டர் தூரம் நடந்துசென்று  குறை கேட்ட கலெக்டர்
x
தினத்தந்தி 13 Aug 2021 11:44 PM IST (Updated: 13 Aug 2021 11:44 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரி மலையில் 3 கிலோமீட்டர் தூரம் கலெக்டர் நடந்து சென்று பொதுமக்களிடம் குறை கேட்டு, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க உத்தரவிட்டார்.

ஜோலார்பேட்டை

ஏலகிரி மலையில் 3 கிலோமீட்டர் தூரம் கலெக்டர் நடந்து சென்று பொதுமக்களிடம் குறை கேட்டு, அவர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துகொடுக்க உத்தரவிட்டார்.

மின்சாரம் இல்லாத கிராமம்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது.   

ஏலகிரிமலை 15 கிராமங்களை உள்ளடக்கி உள்ளது.  இங்குள்ள ராயனேரி கிராமத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் காட்டுக்குள் கெட்டுகாடு வட்டம் என்ற கிராமம் உள்ளது. 

இங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் 3 தலைமுறையாக மின் சாரம், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி வசித்து வருகின்றனர்.

இதனையடுத்து ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. தேவராஜி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து மின் இணைப்பு வழங்க வலியுறுத்தினார். அதன்பேரில் ராயனேரி கிராமத்திலிருந்து கெட்டுகாடு வட்டத்திற்கு 47 மின்கம்பங்கள் கொண்டுவரப்பட்டு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் மணிகண்டன், வாணியம்பாடி கோட்ட பொறியாளர் பாஷா முகமது ஆகியோர் தலைமையில் மின்கம்பங்கள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நடந்து சென்று குறைகேட்டார்

இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா  ஏலகிரி மலையில் ஆய்வு மேற்கொண்டார். அவர் 3 கிலோமீட்டர் தூரம் காட்டுப்பாதையாக நடந்து சென்று அங்குள்ள மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்து, அவர்களுக்கு பட்டா வழங்கி, அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்க உத்தரவிட்டார். 

 ஆய்வின் போது ஜோலார்பேட்டை வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன், ஏலகிரி மலை கிராம நிர்வாக அலுவலர் மஸ்தான், ஊராட்சி செயலாளர் சண்முகம் மற்றும் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

Next Story