நெமிலி அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி தொடர் போராட்டம்


நெமிலி அருகே நெல் கொள்முதல் நிலையம் திறக்க வலியுறுத்தி தொடர் போராட்டம்
x
தினத்தந்தி 13 Aug 2021 11:46 PM IST (Updated: 13 Aug 2021 11:46 PM IST)
t-max-icont-min-icon

நெமிலி அருகே நேரடி நெல்கொள்முதல் நிலையம் மாற்றப்பட்டதை கண்டித்தும், மீண்டும் திறக்கக்கோரி நேற்று விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெமிலி

வேறு ஊருக்கு மாற்றம்

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த கீழ்வெங்கடாபுரம் பகுதியில் திறக்கப்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையம் வேறு கிராமத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே திறக்கப்பட்ட வெங்கடாபுரத்திலேயே நெல்கொள்முதல் நிலையம் செயல்படவேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் மற்றும் பா.ம.க. உழவர் பேரியக்கத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அரசியல் தலையீட்டின் காரணமாக ஏற்கனவே செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டு ஒரு  அரசியல் கட்சியினருக்கு சொந்தமான இடங்களில் மட்டும் தற்போது நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுவதாக கூறப்படுகிறது.

தொடர் போராட்டம்

இதற்கு கண்டனம் தெரிவித்தும் ஏற்கனவே செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்க கோரியும் கடந்த புதன்கிழமை நெமிலி பஸ் நிலையத்தில் பா.ம.க. உழவர் பேரியக்கத்தின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால் மாவட்ட நிர்வாகம் உரிய தீர்வு காணாமல் உள்ளதாகவும், அரசியல் தலையீட்டின் காரணமாக இதில் கவனம் செலுத்தவில்லை என்றும் கூறி கீழ்வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நேற்று காலை முதல் நெல் கொள்முதல் நிலையம் அமைந்துள்ள இடத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை.

Next Story