சொந்த பணத்தில் அரசு பள்ளியை மேம்படுத்திய தலைமை ஆசிரியை
கோத்தகிரி அருகே சொந்த பணத்தில் அரசு பள்ளியை மேம்படுத்திய தலைமை ஆசிரியைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கோத்தகிரி
கோத்தகிரி அருகே சொந்த பணத்தில் அரசு பள்ளியை மேம்படுத்திய தலைமை ஆசிரியைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
அரசு பள்ளி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி தாலூக்காவிற்கு உட்பட்ட கோடநாடு அருகே கெரடாமட்டம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்து உள்ளது. இந்த பள்ளியில் தலைமை ஆசிரியையாக மீனா என்பவர், கடந்த 5 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் இடைநின்ற குழந்தைகள் மற்றும் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகளை கணக்கெடுத்து, அந்த பள்ளியில் சேர்த்து வருகிறார்.
குறிப்பாக வெளிமாநில தொழிலாளர்களின் 20 குழந்தைகளை படிக்க வைத்து உள்ளார். இதன் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரித்து, தற்போது அந்த பள்ளியில் சுமார் 110 மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி மூடப்பட்டு உள்ளது.
இதை பயன்படுத்தி தலைமை ஆசிரியை மீனா, தனது சொந்த பணத்தில் பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்தி உள்ளார். அதாவது உயர் அதிகாரிகளின் அனுமதி பெற்று ரூ.3 லட்சம் செலவில் பள்ளி கட்டமைப்புகளை மேம்படுத்தி, கட்டிடங்களுக்கு குழந்தைகள் கவரும் வகையில் வர்ணங்கள் பூசி பொலிவுபடுத்தி இருக்கிறார்.
பாராட்டு
மேலும் பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்காக ரூ.1 லட்சம் செலவில் நவீன கழிப்பறை கட்டி உள்ளார்.
இது மட்டுமின்றி பள்ளியில் கல்வி பயின்று வரும் குழந்தைகளுக்கு தனது சொந்த செலவில் டேக்வாண்டோ தற்காப்புக்கலை, இந்தி மொழி பயிற்சி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்பித்து வருகிறார்.
இதேபோன்று கொரோனா ஊரடங்கு நேரத்தில் தனது பள்ளியில் படித்து வந்த வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள 100 குழந்தைகளின் பெற்றோருக்கு உணவு பொருட்கள் தொகுப்பை வழங்கினார். இவரின் இந்த செயல்பாடுகளை வட்டார கல்வி அலுவலர், ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டி ஊக்குவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story