கோவில்களில் அனுமதி மறுப்பால் பக்தர்கள் வெளியே நின்று வழிபாடு


கோவில்களில் அனுமதி மறுப்பால் பக்தர்கள் வெளியே நின்று வழிபாடு
x
தினத்தந்தி 14 Aug 2021 2:09 AM IST (Updated: 14 Aug 2021 2:09 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் அனுமதி மறுப்பால் பக்தர்கள் வெளியே நின்று வழிபாடு செய்தனர்.

மங்களமேடு:

ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதற்கிடையே கொரோனா பரவலை தடுக்க நேற்று முதல் 3 நாட்களுக்கு கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல கோவில்களில் பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரம்பலூர் மாவட்ட பகுதியிலும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்தனர். மங்களமேட்டை அடுத்த சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தவர் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பக்தர்கள் கோவில் முன்பு தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி தங்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்தனர். இதேபோல் வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோவில் மூடப்பட்டதால் பக்தர்கள் கோவில் முன்பு வழிபாடு செய்தனர்.
சு.ஆடுதுறையில் உள்ள செல்லியம்மன் கோவிலில் பால்குட விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை கோவில் முன்பு 108 பால் குடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பெண்கள் பால்குடங்களை தலையில் வைத்துக்கொண்டு தேரோடும் வீதி வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. இதையடுத்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்ட அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் குறைந்த அளவே பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பெண்ணக்கோணம், திருமாந்துறை, பெருமத்தூர், எறையூர் கிராமங்களில் மாரியம்மன் மற்றும் செல்லியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

Next Story