மேகதாது திட்டத்தில் மத்திய அரசு நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்; சித்தராமையா அறிக்கை


மேகதாது திட்டத்தில் மத்திய அரசு நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும்; சித்தராமையா அறிக்கை
x
தினத்தந்தி 14 Aug 2021 3:12 AM IST (Updated: 14 Aug 2021 3:12 AM IST)
t-max-icont-min-icon

மேகதாது திட்டத்தில் மத்திய அரசு நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு: மேகதாது திட்டத்தில் மத்திய அரசு நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும் என்று சித்தராமையா கூறியுள்ளார். 
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமரசத்திற்கு இடமில்லை

மேகதாது திட்டம் குறித்து பா.ஜனதா இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. மேகதாது திட்டத்தை தமிழக பா.ஜனதா எதிர்க்கிறது. தமிழக பா.ஜனதாவினரை பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி ஆதரிக்கிறார். இந்த திட்டத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் திடமான நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக்கிறோம். ஆனால் சி.டி.ரவியின் வாயை மூடாவிட்டால் மேகதாது திட்டத்தில் நமக்கு நாமே மோதிக்கொள்ளும் நிலை உண்டாகும்.

நாங்களும் இந்தியர்கள் தான். ஆனால் கர்நாடகத்தின் நலனை புறக்கணிக்க முடியாது. நிலம், நீர், மொழி ஆகிய விஷயங்களில் நாங்கள் அரசியல் செய்ய மாட்டோம். இந்த விஷயங்களில் சமரசத்திற்கு இடமில்லை. மேகதாது திட்டத்தில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளை முதல்-மந்திரி பெற வேண்டும். இந்த திட்ட விஷயங்களில் பா.ஜனதா தலைவர்கள் வெவ்வேறு விதமாக பேசுவதை நிறுத்த முதல்-மந்திரி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது திட்ட விஷயத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தனது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும்.

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை

மேகதாது திட்டத்தில் மத்திய அரசு கண்ணாமூச்சி ஆடுவதை நிறுத்திவிட்டு, நியாயத்தின் பக்கம் நிற்க வேண்டும். தேவையின்றி பிரச்சினை செய்யும் தமிழக அரசுக்கு மத்திய அரசு திடமான முறையில் அறிவுரை கூற வேண்டும். காவிரி நடுவர் மன்றம், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புகள் மூலம் காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

கடந்த 2 ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருவதால், தமிழகத்திற்கு அதிகளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. ஆனாலும் மேகதாது திட்டத்தை அந்த மாநிலம் எதிர்ப்பது சரியல்ல. உபரி நீரில் 64 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) தண்ணீரை தேக்கி குடிநீர், மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை கடந்த 2013-ம் ஆண்டு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது உருவாக்கினேன். மேகதாது திட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

மாநிலங்களுடன் நல்லுறவு

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவார்ந்த அரசியல்வாதி. அவர் ஜெயலலிதா போல் நீர், நிலம், மொழி விஷயங்களில் அரசியல் செய்யக்கூடாது. அண்டை மாநிலங்களுடன் நல்லுறவை வளர்த்து கொள்ள வேண்டும். பெங்களூரு, மைசூரு நகரங்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக இந்த மேகதாது திட்டம் அமல்படுத்தப்படுகிறது. பெங்களூருவில் தமிழர்கள் உள்பட அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் வசிக்கிறார்கள். அதனால் இதில் அரசியல் செய்யக்கூடாது.
இவ்வாறு சித்தராமையா கூறியுள்ளார். 

Next Story