பெங்களூருவில் மீண்டும் வார இறுதி ஊரடங்கு அமலாகிறதா?
பெங்களூருவில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று (சனிக்கிழமை) முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
பெங்களூரு: பெங்களூருவில் கொரோனா பரவலை தடுப்பது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று (சனிக்கிழமை) முக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
கொரோனா பரவல்
கர்நாடகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரம் என்ற அளவில் குறைந்த நிலையில் கடந்த சில நாட்களாக வைரஸ் பரவல் மெல்ல, மெல்ல அதிகரித்து வருகிறது. தற்போது மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்கி பதிவாகி வருகிறது. இது கர்நாடக அரசை கவலை அடைய செய்துள்ளது.
கேரளா, மராட்டிய மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் அந்த மாநிலங்களை ஒட்டியுள்ள மைசூரு, சாம்ராஜ்நகர், குடகு, தட்சிண கன்னடா, பெலகாவி, கலபுரகி, விஜயாப்புரா, பீதர் ஆகிய 8 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு கடந்த வாரம் அமல்படுத்தப்பட்டது. இதற்கு அந்த மாவட்டங்களில் உள்ள வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
வார இறுதி ஊரடங்கு
இந்த நிலையில் தலைநகர் பெங்களூருவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் வார இறுதி ஊரடங்கை அமல்படுத்தலாமா? என்பது குறித்து மாநில அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதுகுறித்து ஆலோசித்து முடிவு எடுக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
இதில் மூத்த மந்திரிகள், கொரோனா தடுப்பு நிபுணர் குழுவினர், சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். இதில் வார இறுதி ஊரடங்கு குறித்த முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. பெங்களூருவை பொறுத்தவரையில் கொரோனா தினசரி பாதிப்பு 400-க்குள் தான் உள்ளது. அடுத்து வரும் நாட்களில் இது அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.
Related Tags :
Next Story