கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் ரூ.15½ கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு புறநகர் ஆஸ்பத்திரி


கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் ரூ.15½ கோடியில் தரம் உயர்த்தப்பட்ட அரசு புறநகர் ஆஸ்பத்திரி
x
தினத்தந்தி 14 Aug 2021 10:45 AM IST (Updated: 14 Aug 2021 10:45 AM IST)
t-max-icont-min-icon

கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் ரூ.15 கோடியே 52 லட்சம் செலவில் தரம் உயர்த்தப்பட்ட அரசு புறநகர் ஆஸ்பத்திரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் உள்ள அரசு புறநகர் ஆஸ்பத்திரி கடந்த 34 ஆண்டுகளாக 100 படுக்கை வசதிகளை கொண்டு செயல்பட்டு வந்தது. தற்போது அந்த ஆஸ்பத்திரியை ரூ.15 கோடியே 52 லட்சம் செலவில் 300 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு ஆஸ்பத்திரியாக மேம்படுத்தப்பட்டு, தரம் உயர்த்தப்பட்டது.

மேம்படுத்தப்பட்டு, தரம் உயர்த்தப்பட்ட இந்த அரசு புறநகர் ஆஸ்பத்திரியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து அவர், ஆஸ்பத்திரியை பார்வையிட்டு, நவீன மருத்துவ கருவிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேம்படுத்தப்பட்ட இந்த ஆஸ்பத்திரியில் நோயாளிகளின் வசதிக்காக கூடுதல் குளியலறை மற்றும் கழிவறை வசதிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை ஆய்வக வசதி, சி.டி. ஸ்கேன் அறை வசதியும் கொண்டு வரப்பட்டுள்ளன.

குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள், திரவ ஆக்சிஜன் கலன் மற்றும் தேவையான குழாய்கள், கட்டுப்பாட்டு அறைகளுடன் கூடிய சகல வசதிகளும் முழு அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதேபோல், மின் பணிகளுக்காக 500 கிலோ வாட் கூடுதல் டிரான்ஸ்பார்மர், எச்.டி. பேனல் வசதி, 250 கிலோ வாட் கூடுதல் ஜெனரேட்டர் வசதி, தீவிர சிகிச்சைப்பிரிவு, ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சை அரங்குகளில் குளிர்சாதன வசதி, மின்விளக்குகள், மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளன.

300 படுக்கை வசதிகள் கொண்ட இந்த ஆஸ்பத்திரியில் 200 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் இருக்கிறது. கொரோனா நோயாளிகளுக்கான பிரத்தியேக நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி, பிறநோயாளிகளுக்கு தனியாக வேறு எக்ஸ்ரே கருவியும் பயன்படுத்தப்பட உள்ளது.

ஆஸ்பத்திரியில் உள்ள அனைத்து பிரிவுகளும் கணினி மயமாக்கப்பட்டு இருக்கிறது. 24 மணி நேரமும், தடையின்றி ஆக்சிஜன் கிடைக்கும் பொருட்டு 6 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் டேங்க் நிறுவப்பட்டுள்ளது. ஆஸ்பத்திரி மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு 24 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன.

ஆஸ்பத்திரி திறப்பு விழா நிகழ்ச்சியில், அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் வகையில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தாயகம் கவி எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story