சென்னை கடற்கரை சாலையில் நாளை திறக்க உள்ள 75-வது சுதந்திர தின நினைவு தூணில் பொருத்த அசோக சக்கரம்
சென்னை கடற்கரை சாலையில் தமிழக அரசு சார்பில் நாளை திறக்கப்பட உள்ள 75-வது சுதந்திர தின நினைவு தூணில் பொருத்த மாமல்லபுரத்தில் அசோக சக்கரம் மற்றும் 4 தலையுடன் கூடிய சிங்க முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்,
75-வது சுதந்திர தினத்தை நினைவுபடுத்தும் வகையில் சென்னை கடற்கரை சாலையில் சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
இதற்காக சென்னை கடற்கரை சாலையில் காமராஜர் சாலை-சுவாமி சிவானந்தா சாலை சந்திப்பில் இடம் தேர்வு செய்யப்பட்டு அங்கு பொதுப்பணித்துறை சார்பில் 55 அடி உயரத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நினைவு தூணில் பஞ்சலோகத்தால் ஆன அசோக சக்கரம் மற்றும் 4 தலையுடன் கூடிய சிங்க முகம் செய்யப்பட்டு பொருத்தப்பட உள்ளது. இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு தனியார் உலோக சிற்ப கலை கூடத்தில் அசோக சக்கரம் மற்றும் 4 தலையுடன் கூடிய சிங்க முகம் வடிவமைக்க பொதுப்பணித்தறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. சிற்பகலைஞர் ரவீந்திரன் ஸ்தபதி தலைமையில் 15-க்கும் மேற்பட்ட உலோக சிற்ப கலைஞர்கள் கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் ரசிக்கும் வகையில் இதை வடிவமைத்துள்ளனர்.
4 தலையுடன் கூடிய சிங்க முகம் 5 அடி உயரத்திலும், அசோக சக்கரம் 8 அடி உயரத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவை சுதந்திர நினைவு தூணில் பொருத்தப்பட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) சுதந்திர தினத்தன்று திறக்கப்பட உள்ளது.
Related Tags :
Next Story