குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீஸ் நிலையங்களில் குழந்தைகள் நல அலுவலர்
செங்கல்பட்டு மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போலீஸ் நிலையங்களில் குழந்தைகள் நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.
வண்டலூர்,
செங்கல்பட்டு மாவட்டத்தில் ஓட்டேரி, கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், கேளம்பாக்கம், தாழம்பூர், செங்கல்பட்டு நகரம் மற்றும் தாலுகா 7 போலீஸ் நிலையங்கள் உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றங்கள் தடுப்பது சம்பந்தமாக பகல் மற்றும் இரவு ரோந்து செல்லும் போலீசாருக்கு இருசக்கர ரோந்து வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்தில் இருசக்கர மோட்டார் சைக்கிள் ரோந்து வாகனத்தை செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த இருசக்கர ரோந்து வாகனத்தில் 2 ரோந்து போலீஸ்காரர் 12 மணி நேர கழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இதன்மூலம் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க முடியும். மேலும், சாலை விபத்துகளை உடனடியாக சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்ய முடியும்.
இருசக்கர ரோந்து வாகனத்தில் அவசர ஒலிப்பான், நவீன வசதிகள் பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரோந்து போலீசார் விரைவாக சென்று குற்றங்களை தடுக்கவும், அவசர சூழ்நிலையில் பொதுமக்களிடம் எளிதாக நவீன தொழில்நுட்பம் மூலம் பேசி பிரச்சினைகளை சரிசெய்யவும் முடியும், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் குழந்தைகள் நல அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க 16 போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு முதல்கட்டமாக 16 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் போலீஸ் நிலையத்தில் கொடுக்கப்படும் புகார்கள் மற்றும் தொலைபேசி தகவல்களுக்கு உடனுக்குடன் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகளை தடுத்து சட்டரீதியான நடவடிக்கையை எடுக்க முடியும், மாவட்டத்தில் மீதமுள்ள போலீஸ் நிலையங்களுக்கு அடுத்தகட்டமாக 9 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக போலீஸ் நிலையங்களில் நியமிக்கப்பட்டுள்ள குழந்தைகள் நல அலுவலர்களுக்கு 16 மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள போலீஸ் நிலையங்களுக்கு அடுத்தகட்டமாக, 9 மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவருடன் வண்டலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அனுமந்தன், கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story