குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேச்சு


குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேச்சு
x
தினத்தந்தி 14 Aug 2021 4:51 PM IST (Updated: 14 Aug 2021 4:51 PM IST)
t-max-icont-min-icon

கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டங்களை நடத்தி குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறினார்.

திருவாரூர், 

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி சாந்தி முன்னிலை வகித்தார். பின்னர் கலெக்டர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

நடப்பு கல்வியாண்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த குழந்தைகள் தங்கள் பயின்றுவரும் அதே தனியார் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளியில் தொடர்ந்து கட்டணமின்றி கல்வி பயில கல்வித்துறை வாயிலாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்ட ரீதியான தத்தெடுப்பு மற்றும் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும்.

குழந்தை திருமணத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட பெண் குழந்தைகளுக்கு சமூக நலத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி முகமையுடன் இணைந்து மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் அனைத்து பஞ்சாயத்துகளிலும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் உள்ள உறுப்பினர்களை சம்பந்தப்பட்ட துறை தலைவர்கள் ஒத்துழைப்புடன் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டங்களை நடத்தி குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்திட வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இதில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்செல்வி, சுகாதாரத்துறையின் இணை இயக்குனர் (பொறுப்பு) உமா, முதன்மைக்கல்வி அலுவலர் தியாகராஜன், சமூகப்பாதுகாப்புத்துறை நன்னடத்தை அலுவலர் பால் இக்னேஷ்வர் சேவியர்ராஜ், குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story