காளையார்கோவில் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மோதல்


காளையார்கோவில் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மோதல்
x
தினத்தந்தி 14 Aug 2021 5:20 PM IST (Updated: 14 Aug 2021 5:20 PM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் ஒன்றியக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 2 பேர் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர்.

காளையார்கோவில்,

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய குழு தலைவர் ராஜேஸ்வரி(அ.தி.மு.க.) தலைமை தாங்கினார். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாஸ்கரன், சத்யன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் நடந்த போது 13-வது வார்டு உறுப்பினர்(அ.தி.மு.க.) மகேஸ்வரன் பேசும் போது, கூட்டத்தில் கவுன்சிலர்களின் கோரிக்கைகளை ஏன் மதிப்பது இல்லை? அவர்களது கோரிக்கையை நிறைவேற்றாமல் ஒன்றியக்குழு தலைவரும் மற்ற சிலரும் மட்டும் பேசிக்கொண்டு இருப்பது எந்த விதத்தில் நியாயம்? எங்களுக்கு தெரியாமலேயே பணிகள் நடப்பதும் நிதி ஒதுக்கீடு செய்வதும் ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

இதை கேட்டதும் 12-வது வார்டு அ.தி.மு.க. உறுப்பினர் மனோகரன், ஒன்றிய கூட்டத்தில் இப்படி எல்லாம் பேசக்கூடாது என்று அவரோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதம் முற்றி இருவரும் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர். பின்னர் ஆத்திரம் அடைந்த மனோகரன் தனது பிளாஸ்டிக் இருக்கை எடுத்து மகேஸ்வரனை தாக்க முயன்றார். இதை பார்த்ததும் மற்ற கவுன்சிலர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள். இந்த சம்பவம் கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதன்பிறகு கவுன்சிலர் மகேஸ்வரன் தலைவர் இருக்கைக்கு எதிரில் தரையில் உட்கார்ந்து திடீர் தர்ணா நடத்தினார். அப்போது அவர் கூறும் போது, கடந்த ஒரு ஆண்டு காலமாக ஊராட்சி ஒன்றியத்தில் எந்த திட்டங்களும் நடைபெறவில்லை. முககவசம் வாங்குவதும், பிளீச்சிங் பவுடர் வாங்குவதற்கும் மட்டுமே நிதி ஒதுக்கீடு நடைபெற்று உள்ளது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளது. இது பற்றி விசாரிக்க வேண்டும் என்று கோஷமிட்டார். பின்னர் தலைவரும், மற்ற கவுன்சிலர்களும் அவரை சமாதானப்படுத்தினார்கள். அதன்பிறகு அவர் தனது இருக்கையில் சென்று அமர்ந்தார்.

இதை தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர் பாண்டியராஜன் பேசும் போது, கடந்த 15 மாதங்களாக ஒன்றியத்தில் முககவசம், பிளீச்சிங் பவுடர் வாங்குவது மட்டும் தான் நடைபெற்று உள்ளது. மற்ற வேலைகள் எதுவும் நடைபெறவில்லை. 100 நாட்கள் வேலையிலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கியதிலும் முறைகேடு நடைபெற்று உள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என்றார். முடிவில் ஒன்றிய குழு துணைத்தலைவர் ராஜா நன்றி கூறினார்.

Next Story