சுதந்திர தினத்தையொட்டி முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை பலத்த போலீஸ் பாதுகாப்பு


சுதந்திர தினத்தையொட்டி  முக்கிய இடங்களில் வெடிகுண்டு சோதனை  பலத்த போலீஸ் பாதுகாப்பு
x
தினத்தந்தி 14 Aug 2021 5:53 PM IST (Updated: 14 Aug 2021 5:53 PM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி முக்கிய இடங்களில் போலீசார் வெடிகுண்டு கண்டறியும் சோதனை நடத்தினர். மேலும் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தேனி:
நாடு முழுவதும் சுதந்திர தின விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் அணைகள், வழிபாட்டு தலங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
போலீஸ் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. ஆண்டிப்பட்டி அருகே கணவாய் சோதனை சாவடி, தேவதானப்பட்டி அருகே காட்ரோடு சோதனை சாவடி ஆகிய இடங்களிலும், தமிழக-கேரள மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளிலும் தீவிர வாகன தணிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.
வெடிகுண்டு சோதனை
மாவட்டம் முழுவதும் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் சுதந்திர தின பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா நடக்கும் தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விளையாட்டு அரங்கில் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வக்குமார், திருப்பரங்கிரிவாசன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று வெடிகுண்டு கண்டறியும் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வெடிகுண்டு கண்டறியும் பயிற்சி பெற்ற போலீஸ் மோப்பநாய் வீரா உதவியுடனும், மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடனும் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர் தேனி பழைய பஸ் நிலையம், கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையம், வைகை அணை, மஞ்சளாறு அணை, சோத்துப்பாறை அணை உள்ளிட்ட இடங்களிலும், போடி, கம்பம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.


Next Story