வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வார விடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
கொடைக்கானல்:
வார விடுமுறையையொட்டி நேற்று கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சுற்றுலா பயணிகள்
‘மலைகளின் இளவரசி’யான கொடைக்கானலில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுற்றுலா இடங்கள், பூங்காக்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நகரின் அழகை கண்டுரசிக்க தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர். அதிலும், வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகள் வருகை அதிக அளவில் காணப்படுகிறது.
இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிள், கார், சுற்றுலா வேன்களில் கொடைக்கானலுக்கு படையெடுத்தனர். நகர் பகுதியில் உள்ள சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளதால் மேல் மலைப்பகுதியில் உள்ள மன்னவனூர், கூக்கால், போளூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்றனர். அப்போது அங்குள்ள கூக்கால் ஏரி உள்ளிட்ட சுற்றுலா இடங்களை பார்வையிட்டனர். மேலும் தங்களது செல்போன்களில் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
பலத்த பாதுகாப்பு
இதற்கிடையே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு மற்றும் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு நேற்று கொடைக்கானலில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் தலைமையிலான போலீசார் நகரின் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் நகர் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. மேலும் நகருக்கு வரும் அனைத்து வாகனங்களும் போலீசாரால் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதேபோல் சுகாதாரத்துறை சார்பிலும் வாகன சோதனை மற்றும் ரோந்து பணி நடைபெற்றது. அப்போது முக கவசம் அணியாமல் வந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதித்தனர்.
திருப்பி அனுப்பப்பட்ட கேரள சுற்றுலா பயணிகள்
கொடைக்கானலின் நுழைவு பகுதியான வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே சுகாதாரத்துறை மற்றும் போலீசார் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சுற்றுலா பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. குறிப்பாக கேரளாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் மற்றும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதற்கான மருத்துவ சான்றிதழ் வைத்திருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் நேற்று கேரளாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சிலர் எந்தவித மருத்துவ சான்றிதழும் இல்லாமல் கொடைக்கானலுக்கு வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், சான்றிதழ் இல்லாமல் அனுமதிக்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பினர்.
Related Tags :
Next Story