பி.ஏ.பி.கால்வாய் உடைப்பு சீரமைப்பு


பி.ஏ.பி.கால்வாய் உடைப்பு சீரமைப்பு
x
தினத்தந்தி 14 Aug 2021 10:11 PM IST (Updated: 14 Aug 2021 10:11 PM IST)
t-max-icont-min-icon

பி.ஏ.பி.பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு தண்ணீர் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தளி
பி.ஏ.பி.பிரதான கால்வாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைக்கப்பட்டு தண்ணீர் விடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பாசனத்திற்கு தண்ணீர்
பரம்பிக்குளம்-ஆழியாறு பாசனத்திட்டத்தின் கீழ் கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சத்து 76 ஆயிரத்து 152 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இதற்காக பாசன நிலங்கள் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு ஆண்டுக்கு 2 மண்டலங்கள் வீதம் சுழற்சி முறையில் உடுமலையை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
 பி.ஏ.பி. தொகுப்பு அணைகளில் இருந்து காண்டூர் கால்வாய் மூலம் பெறப்படும் தண்ணீரும் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் உருவாகும் காட்டாறுகள், பாலாறு மற்றும் திருமூர்த்திமலை ஆறு ஆகியவற்றின் மூலம் பெறப்படுகின்ற தண்ணீரும் திருமூர்த்தி அணையின் முக்கிய நீர் ஆதாரங்களாகும். அதை ஆதாரமாகக் கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் உடுமலை, கணக்கம்பாளையம், மடத்துக்குளம், குமரலிங்கம், பூலாங்கிணர் மற்றும் குடிமங்கலம் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தீவிர மழை
இந்த நிலையில் கடந்த மாதம் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் மழை தீவிரம் அடைந்தது. இதன் காரணமாக அங்குள்ள ஆறுகள் மூலமாக பி.ஏ.பி. தொகுப்பு அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டது. இதனால் அணைகளின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. ஆனால் பி.ஏ.பி. திட்டத்தின் உயிர்நாடியான திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து ஏற்படவில்லை.
 அதைத்தொடர்ந்து பி.ஏ.பி. தொகுப்பு அணைகளிலிருந்து காண்டூர் கால்வாய் மூலமாக திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் அணையின் நீர் இருப்பு வேகமாக உயர்ந்து வந்தது. அதைத்தொடர்ந்து கடந்த 3-ந்தேதி அணையில் இருந்து 4-ம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
கால்வாயில் உடைப்பு
ஆனால் கால்வாய் பராமரிப்பு பணிக்காக அன்றைய தினம் இரவே தண்ணீர் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் கடந்த 6-ந் தேதி பிரதான கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் கெடிமேடு அருகே கடந்த 12-ந்தேதி மாலை பி.ஏ.பி. பிரதான கால்வாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கால்வாயில் சென்று கொண்டிருந்த தண்ணீர் நிறுத்தப்பட்டு சீரமைப்பு பணி மும்முரமாக நடைபெற்று வந்தது. பணிகள் முடிவுற்ற நிலையில் நேற்று காலை மீண்டும் கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாகுபடி பணியை கைவிடும்  நிலை
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
பி.ஏ.பி. திட்டத்தின் உயிர்நாடியாக திருமூர்த்தி அணை உள்ளது என்றால் தண்ணீர் வினியோகத்தை முழுமையாக செயல்படுத்துவதற்கு கால்வாய்களின் பங்கு முக்கியமானதாகும். ஆனால் கால்வாய்களில் முறையான பராமரிப்பு மேற்கொள்ளப்படாதது. முறையற்ற நீர் மேலாண்மை காரணமாக பி.ஏ.பி. திட்டத்தை ஆதாரமாகக் கொண்டுள்ள விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.  
அதுமட்டுமின்றி தண்ணீர் திருட்டை தடுப்பதற்கும் கடைமடை வரையிலும் தண்ணீரை வினியோகம் செய்வதற்கு அதிகாரிகள் முன் வருவதில்லை. இதனால் விவசாயிகள் சாகுபடி பணியை கைவிடும் சூழலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே அதிகாரிகள் கால்வாய் பராமரிப்பு மற்றும் நீர் மேலாண்மையில் கவனம் செலுத்தி பாசனத்திற்கு முழுமையாக தண்ணீர் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Next Story