ஆஞ்சநேயரை வழிபட அணைப்பட்டியில் குவிந்த பக்தர்கள்; வைகை ஆற்றில் நீராடி உற்சாகம்


ஆஞ்சநேயரை வழிபட அணைப்பட்டியில் குவிந்த பக்தர்கள்; வைகை ஆற்றில் நீராடி உற்சாகம்
x
தினத்தந்தி 14 Aug 2021 10:13 PM IST (Updated: 14 Aug 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

கோவிலுக்குள் அனுமதி இல்லாத நிலையிலும் அணைப்பட்டி ஆஞ்சநேயரை வழிபட நேற்று பக்தர்கள் குவிந்தனர். வைகை ஆற்றில் நீராடி உற்சாகம் அடைந்தனர்.

திண்டுக்கல்:
கோவிலுக்குள் அனுமதி இல்லாத நிலையிலும் அணைப்பட்டி ஆஞ்சநேயரை வழிபட நேற்று பக்தர்கள் குவிந்தனர். வைகை ஆற்றில் நீராடி உற்சாகம் அடைந்தனர்.
அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில்
திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் நிலக்கோட்டை அருகே உள்ள அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவிலும் ஒன்றாகும். புராண கால வரலாற்றுடன் தொடர்புடைய அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில், வையகத்தை வாழ வைக்கும் வைகை ஆற்றின் கரையில் அமைந்து இருக்கிறது. இதனால் அணைப்பட்டிக்கு வரும் பக்தர்கள் வைகை ஆற்றில் நீராடிவிட்டு, ஆஞ்சநேயரை வழிபட்டு செல்வார்கள்.
இதற்காக ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை, அமாவாசை தினங்களில் திண்டுக்கல் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அணைப்பட்டிக்கு வந்து செல்கின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாசனத்துக்காக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் வைகை ஆற்றில் வழக்கத்தை விட கூடுதலாக தண்ணீர் செல்கிறது.
வைகையில் நீராடிய பக்தர்கள்
இதையடுத்து அணைப்பட்டிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அணைப்பட்டிக்கு வருகின்றனர். இதற்கிடையே நேற்று சனிக்கிழமை என்பதால் பக்தர்கள் அணைப்பட்டியில் குவிந்தனர். வெளியூர் பக்தர்கள் குடும்பத்துடன் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வந்தனர்.
ஆஞ்சநேயர் கோவிலின் அருகில் வைகை ஆற்றில் தண்ணீர் ஓடும் அழகை கண்டதும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குதூகலம் அடைந்தனர். மேலும் வைகை ஆற்றில் அனைவரும் இறங்கி உற்சாகமாக நீராடி மகிழ்ந்தனர். அதையடுத்து அணைப்பட்டி ஆஞ்சநேயரை தரிசனம் செய்யும் ஆவலில் கோவிலுக்கு சென்றனர்.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக கோவிலுக்குள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் கோவிலுக்கு முன்பு நெய், எண்ணெய் ஆகியவற்றால் தீபம் ஏற்றி வெளியே நின்றபடி ஆஞ்சநேயரை மனமுருக வேண்டி கொண்டனர். தரிசனம் கிடைக்காவிட்டாலும் பிரார்த்தனை செய்த திருப்தியோடு திரும்பி சென்றனர்.

Next Story