விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றுகிறார்கள்


விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் கலெக்டர்கள் தேசிய கொடி ஏற்றுகிறார்கள்
x
தினத்தந்தி 14 Aug 2021 10:44 PM IST (Updated: 14 Aug 2021 10:44 PM IST)
t-max-icont-min-icon

சுதந்திர தின விழாவையொட்டி விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியில் இன்று நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர்கள் கலந்துகொண்டு தேசிய கொடி ஏற்றுகிறார்கள். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறும் விழாவில் மாவட்ட கலெக்டர் டி.மோகன் கலந்துகொண்டு, காலை 9.05 மணிக்கு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார்.
அதனை தொடர்ந்து கலெக்டர் டி.மோகன், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் மூத்த குடிமக்கள் இன்றி எளிமையான முறையில் சுதந்திர தின விழாவை கொண்டாட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் மாணவ- மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெறாது. அதுபோல் சுதந்திர போராட்ட தியாகிகளை அவரவர் வீட்டிற்கே சென்று அதிகாரிகள் கவுரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு

விழாவையொட்டி எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் விழா நடைபெறும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்திலும் மோப்ப நாய் சாய்னா உதவியுடன் போலீசார், வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.
மேலும் பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள முக்கிய சாலைகள், மார்க்கெட்டுகள், கடைவீதிகளில் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதுபோல் மாவட்டத்தில் உள்ள பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் மெட்டல் டிடெக்டர் கருவியின் மூலமும், மோப்ப நாய் உதவியுடனும் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

அதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் சுதந்திரதின விழா கொண்டாடப்படுகிறது. இதில் மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் கலந்துகொண்டு தேசிய கொடியேற்றி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்கிறார்.
தொடர்ந்து சிறப்பாக பணிபுரிந்த அலுவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பொதுமக்களுக்கு நலத்தி்ட்ட உதவிகள் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த ஆண்டு சுதந்திரதின விழா மிகவும் எளிமையான முறையில் கொண்டாடப்படுகிறது. இதனால் கலைநிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. சுதந்திரபோராட்ட தியாகிகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று கவுரவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story