கொற்கை அகழாய்வில் பழங்கால வெளிநாட்டு நாணயம், கொள்கலன் கண்டுபிடிப்பு


கொற்கை அகழாய்வில் பழங்கால வெளிநாட்டு நாணயம், கொள்கலன் கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 14 Aug 2021 10:47 PM IST (Updated: 14 Aug 2021 10:47 PM IST)
t-max-icont-min-icon

கொற்கையில் நடந்த அகழாய்வில் பழங்கால வெளிநாட்டு நாணயங்கள், கொள்கலன் கண்டுபிடிக்கப்பட்டது.

ஏரல்:
பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், மட்பாண்ட பொருட்கள் போன்றவை கண்டறியப்பட்டன.

கொற்கையில் தொல்லியல் துறை இயக்குனர் தங்கத்துரை, அலுவலர் ஆசைத்தம்பி உள்ளிட்ட குழுவினர் அகழாய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கு ஏற்கனவே 9 அடுக்கு கொண்ட சுடுமண் குழாய், பல அடுக்கு ெசங்கல் கட்டுமானம், சங்கு அறுக்கும் கூடம், சங்காலான அலங்கார மோதிரங்கள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த நிலையில் கொற்கை மாரமங்கலத்தில் தோண்டப்பட்ட குழியில் வெளிநாட்டைச் சேர்ந்த பழங்கால செம்பு நாணயம், அலுமினிய நாணயம் கண்டெடுக்கப்பட்டது. இதேபோன்று கொற்கையில் நடந்த அகழாய்வில் ஏற்கனவே கண்டறியப்பட்ட பல அடுக்கு செங்கல் கட்டுமானத்தின் அருகில் சுமார் 3 அடி உயர மட்பாண்ட கொள்கலனையும் கண்டறிந்தனர்.
இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறியதாவது:-

பாண்டிய மன்னர்களின் தலைநகராகவும், துறைமுக நகராகவும் சிறப்புற்று விளங்கிய கொற்கையில் முன்பு நடந்த அகழாய்வில் ஏராளமான நாணயங்கள் கண்டறியப்பட்டன. தற்போதும் இங்கு 2 வெளிநாட்டு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன்மூலம் பண்டைய காலத்தில் தமிழர்கள் கடல் கடந்து வாணிபம் செய்தது உறுதியாகிறது. மேலும் இங்கு கண்டுபிடிக்கப்பட்ட 3 அடி உயர கொள்கலனை பழங்கால மக்கள் உணவு தானியங்களை சேமித்து வைக்க பயன்படுத்தி இருக்கலாம். அதனை விரைவில் திறந்து ஆய்வு செய்ய உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அகழாய்வு பணிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) வரையிலும் நடைபெற உள்ள நிலையில், கொற்கையில் கடல்சார்ந்த ஆய்வு மேற்கொள்வதற்காக தமிழக அரசு பட்ஜெட்டில் ரூ.5 கோடி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் பண்டைய தமிழர்களின் தொன்மையான நாகரிகம் உலகறியும் என்று தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

Next Story