ஓய்வுபெற்ற அரசு ஊழியர் எலக்ட்ரீசியன் வீடுகளில் புகுந்து ரூ 27 லட்சம் நகை பணம் கொள்ளை
திருக்கோவிலூர் கள்ளக்குறிச்சி பகுதியில் நள்ளிரவில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மற்றும் எலக்ட்ரீசியன் வீடுகளில் புகுந்து ரூ 27 லட்சம் நகை பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
திருக்கோவிலூர்
எலக்ட்ரீசியன்
திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சரகம் ஜா.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்தவர் அருள்(வயது 35) எலக்ட்ரீசியன். இவரும், அவரது அண்ணன் ராஜேஷ் ஆகியோர் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அருள் நேற்று முன்தினம் அவரது மகன் மோசித்தின் பிறந்தநாளையொட்டி மனைவி அஜிதாவுடன் திருவரங்கம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றார்.
நகை-பணம் கொள்ளை
வீட்டில் இருந்த ராஜேஷ் இரவு நேரம் வீட்டின் கதவுகளை திறந்து வைத்துக்கொண்டு தூங்கியதாக கூறப்படுகிறது. இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டில் புகுந்து அருளின் அறையில் பீரோவில் இருந்த வளையல், நெக்லஸ், தங்கசங்கிலி, 7 மோதிரங்கள, 7 கிராம் எடைகொண்ட 5 தங்க காசுகள் என மொத்தம் 28 பவுன் நகைகள், ரூ.60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.10 லட்சத்து 60 ஆயிரம் என கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், இன்ஸ்பெக்டர் பாபு, மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். பீரோ மற்றும் கதவுகளில் இருந்த ரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர். மோப்பநாய் ராக்கி கொள்ளை நடந்த வீட்டில் இருந்து ஓடோடி சென்று அருகில் உள்ள ஏரியில் போய் நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
இது குறித்து அருள்கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்கு பதிவுசெய்து நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்
கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தனசேகர்(65). இவர் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் செயலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தனசேகர் மனைவி வசந்தா சத்துணவு அமைப்பாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகன், மகளுக்கு திருமணம் நடந்து விட்டது. இதனால் தனசேகரன் அவரது மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனசேகரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மனைவி வசந்தாவுடன் கடந்த ஏப்ரல் மாதம் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்று விட்டார். தனசேகரின் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பயிர் செய்து வரும் புத்தந்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் வீட்டை பாது காத்து வந்தார்.
நகை-பணம் கொள்ளை
அதன்படி கடந்த 11-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு சென்ற ஜெகதீஷ் மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது வீட்டு கதவில் போடப்பட்ட பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
இது பற்றிய தகவல் அறிந்து வந்த தனசேகரின் மகன் அருள்செல்வம் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் 1½ கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரூ.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை காணவில்லை. இரவு நேரத்தில் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் மேற்கண்ட நகை-பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.16 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து அருள்செல்வம் கொடுத்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஓய்வுபெற்ற அரசு ஊழியர் மற்றும் எலக்ட்ரீசியன் வீடுகளில் புகுந்து நகை-பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story